தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு : பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்
அத்துருகிரியில் பச்சை குத்தும் மையம் திறப்பு விழாவின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானுக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அதுருகிரிய நகர சந்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் தளத்தில், இன்று காலை பச்சை குத்தும் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
துலான் சஞ்சுலா என்ற பச்சை குத்தும் நபரினால் இந்த நிலையம் திறக்கப்பட்டுள்ளதுடன், அதில் பிரதம அதிதிகளாக, பிரபல வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்த மற்றும் அவரது மனைவி மற்றும் பிரபல பாடகி கே. சுஜீவா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிகழ்வின் போதே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
அத்துருகிரியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் வெளிநாட்டில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அத்துருகிரியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ள பிரபல பாடகி கே.சுஜீவாவிற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளியான காரணம்
இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் வெளிநாட்டில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இது திட்டமிட்ட துப்பாக்கிச் சூடு எனவும், சில காலமாக நிலவி வந்த தகராறு துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெறுவதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.
பொலிஸார் விசாரணை
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கிளப் வசந்தவின் மனைவியின் பயணப் பொதியில் ரிவோல்வர் ஒன்று காணப்பட்டதாகவும், அது பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |