இனியாவது நாட்டுப்பற்றுடன் செயற்படுங்கள்: தென்னிலங்கை அரசியல் சமூகத்திற்கு சுரேஷ் அறைகூவல்
நாட்டின் அந்நிய செலாவணியை சேமிப்பதற்கும் விவசாயத்தை தொழிற்சாலையாக மாற்றுவதற்கும் உழைத்த வடக்கு-கிழக்கின் பொருளாதார வளங்களை அழித்துவிட்டு அதற்காக வருத்தம்கூட தெரிவிக்காதவர்கள் இனியாவது நாட்டுப்பற்றுடன் செயலாற்றுங்கள் என தென்னிலங்கை அரசியல் சமூகத்திற்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் அறைகூவல் விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் வடமாகாண விஜயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கிற்கான விஜயம்
அந்த அறிக்கையில் மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தின் இரண்டாவது ஆண்டின் ஆரம்பத்தில் வட மாகாணத்தின் அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு, மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டங்களை நடத்துவதற்காகவும் ஏனைய சந்திப்புக்களை நிகழ்த்துவதற்காகவும் 04 நாள் விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதியின் வருகை தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் ஜனாதிபதி தமது விஜயத்தின்போது எவ்விதமான கலந்துரையாடல்களையோ தெளிவுபடுத்தல்களையோ மேற்கொள்ளவில்லை. மாறாக தொடர்ச்சியாகப் பேசிவரும் அபிவிருத்தி தொடர்பிலே பேசினார்.
இருப்பினும் அவற்றுக்கான முறையான நிதி ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அரசாங்கத்தின் மேல் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது.
அதேசமயம், தமிழ்க் கட்சிகள் முன்வைத்த 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார அபிலாசைகளை நிறைவேற்றுவது தொடர்பில் எந்தவிதமான ஆணித்தரமான பதில்களும் அளிக்காமல் பதின்மூன்றாவது திருத்தம் என்பது பொருளாதார அபிவிருத்திக்குப் போதுமானது என்ற கருத்தை மாத்திரம் கூறிச் சென்றிருக்கின்றார்.
13 ஆவது திருத்தம்
13ஆவது திருத்தம் என்பது, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மையமாகக் கொண்டது.
கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக மாகாணசபை தேர்தல்களை நடத்தாமல் இருப்பதுடன், 13ஆவது திருத்தத்தினூடாக மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட பல அதிகாரங்கள் மீளவும் மத்திய அரசால் பறிக்கப்பட்டும் இருக்கின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பிலும் சரி, யாழ்ப்பாணத்திலும் சரி புலம்பெயர் தமிழ் மக்களின் முதலீடுகள் அவசியம் என்பதை மீண்டும் மீண்டும் கூறிவருகின்றார்.
மக்களது காணிகள்
கடந்த காலங்களில் தென் பகுதியிலிருந்த தமிழ் மக்களின் பொருளாதாரம் என்பது அடிக்கடி அரசாங்கம் உருவாக்கிய இனக்கலவரங்களினால் நிர்மூலம் செய்யப்பட்டு பல இலட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகளை தமிழ் மக்கள் இழந்து அகதிகளாக அனுப்பப்பட்ட வரலாறுகள் தமிழ் மக்களுக்குண்டு.
இவை ஒருபுறமிருக்க, யுத்தம் முடிவுற்று 14 வருடங்கள் கடந்த நிலையில், தமிழ் மக்கள் தமது காணிகளை முழுமையாக விடுவிக்கக் கோருகின்ற போதிலும் இன்னமும் அது முழுமையடையவில்லை.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டுக்குள் மீள்குடியேற்றம் முழுமைபெற வேண்டும் என்று கூறும் ஜனாதிபதி, காணிகளை விடுவிப்பதற்கான ஆக்கபூர்வமான அறிவுறுத்தல்களோ நடவடிக்கைகளோ எடுக்கவில்லை என்பதுதான் யதார்த்தமானது.
மேலும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் நீண்ட போராட்டத்திற்கு மதிப்பளிக்காதது மட்டுமல்ல அவர்களது உறவினர்களின் இருப்பு தொடர்பில் அறிந்து கொள்வதற்கான நீதியும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றது.
ஏமாற்றும் முயற்சி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இத்தகைய வார்த்தை ஜாலங்கள் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு முயற்சியாகத் தென்படுகிறதே தவிர, ஜனாதிபதியின் மீதோ, அவரது தலைமையின் மீதான அரசின் மீதோ நம்பிக்கை கொள்வதற்கு இடமளிக்கவில்லை.
அரசாங்கத்தின் இவ்வாறான தொடர் நடவடிக்கைகள் தான் தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான சூழ்நிலையை நிர்ப்பந்தித்துள்ளது என்றும் அவ் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |