மீண்டும் கிடைக்கவுள்ள பணத் தொகை! இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
அஸ்வெசும வேலைத்திட்டத்தில், எஞ்சியுள்ள 111,000 பயனாளிகளுக்கு அடுத்த சில நாட்களில் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அஸ்வெசும வேலைத் திட்டத்தின் மூலம் உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை
தகுதியுடைய 15 இலட்சம் குடும்பங்களில் 791,000 குடும்பங்களின் கணக்குகளில் சுமார் 05 பில்லியன் ரூபா வைப்பிலிட தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 683,000இற்கும் அதிகமானோரின் கணக்குகளில் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 111,000 பயனாளிகளுக்கு அடுத்த சில நாட்களில் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
மேலும், இரண்டாவது குழுவிற்கான கொடுப்பனவுகளை அடுத்த வாரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 15ஆம் திகதிக்குள் இந்தத் தொகை முழுவதையும் வைப்பிலிட்டு நிறைவுசெய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தில் தகுதி பெற்ற அனைவரும் பலன்களைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும் எனவே, மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தகுதியுடைய அனைவருக்கும் நலன்புரிக் கொடுப்பனவுகள் வழங்குவதோடு, மாதந்தோறும் இவர்களுக்கான பணம் வழங்கப்படும் என்றும் இதில் மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்றும் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |