அஸ்வெசும திட்டம் தொடர்பில் இதுவரை 400,000 முறைப்பாடுகள்
சமுர்த்தித் திட்டத்தை அஸ்வசும திட்டமாக மாற்றியதன் பின்னர் எழுந்துள்ள சிக்கல்நிலை தொடர்பில் இதுவரை 4 இலட்சம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
மேலும் மேன்முறையீட்டு மனுக்களை சமர்ப்பிக்க இன்னும் 11 நாட்களே உள்ளதாகவும் ஏறக்குறைய 6,000 ஆட்சேபனைகள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அஸ்வெசும’ ஆறுதல் நலன்புரி திட்டத்தின் கீழ் மக்கள் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகங்களில் தனிப்பட்ட முறையில் கையளிப்பதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார்.
4 இலட்சம் மேன்முறையீடு
இலங்கை அரசாங்கத்தால் அஸ்வெசும எனும் புதிய ஆறுதல் நலன்புரி திட்டம் கடந்த 21.06.2023 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, குறித்த திட்டத்தை அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் விமர்சித்திருந்தனர்.
இந்த பின்னணியில், திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 8 நாட்களுக்குள் 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட மேன்முறையீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், மேன்முறையீடுகள் மாத்திரமன்றி, குறித்த திட்டம் தொடர்பான ஆட்சேபனைகளையும் மக்கள் முன்வைக்கலாம் என சபையின் உறுப்பினரான கமல் பத்மசிறி தெரிவித்திருந்தார்.
மேலும், குறித்த ஆட்சேபனைகளை பெயர் குறிப்பிடாமல் சமர்ப்பிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |