அஸ்வெசும பயனாளிகளின் தெரிவில் பாரிய முறைகேடுகள்
அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு செய்வதில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காததற்கு அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்றக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை உடனடியாக ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நிவாரணப் பயனாளிகளின் தெரிவு சரியான முறையில் நடைபெறவில்லை என்றும் அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மின்கட்டணத்தில் வறுமை அடையாளம்
நிவாரணப் பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் போது, வறுமையில் வாடும் தகுதியுள்ளவர்களைத் தேர்ந்தெடுக்குமாறும் பொது நிதிக்கான நாடாளுமன்றக் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
வீடுகளில் நுகரப்படும் மின் அலகுகளின் அளவை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும் மின்கட்டணத்தில் வறுமையை அடையாளம் காண முடியும் என்றும் அந்த குழு கூறியுள்ளது.
நிவாரணப் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் தற்போது நடைமுறையில் உள்ள மதிப்பெண் முறையை மாற்றி அமைக்க உள்ளதாகவும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழு கடந்த 28 ஆம் திகதி நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |