கிளிநொச்சியில் பாடசாலை அதிபரால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதி
கிளிநொச்சியில் பாடசாலையொன்றின் அதிபரால் தாக்கப்பட்ட தரம் எட்டில் கல்வி பயிலும் மாணவன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (29.10.2022) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 29ஆம் திகதி பாடசாலையின் காலை ஆராதனையின் போது ஒலி பெருக்கியில் மாணவனை அழைத்த அதிபர் அனைத்து மாணவர்களின் முன்னிலையில் சிறுவர் இல்ல பேருந்தில் நீ வரக் கூடாது எனத் தெரிவித்து கன்னத்தில் அறைந்துள்ளார் என பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமது இருப்பிடத்திலிருந்து சிறுவர் இல்லம் ஒன்றுக்கு சொந்தமான சிற்றூர்தி ஒன்று சிறுவர் இல்ல மாணவர்களை பாடசாலைக்கு தினமும் எற்றி செல்வது வழக்கம். எனவே எனது மகனை நான் அதில் ஏற்றி அனுப்புவேன்.
பொருளாதார நெருக்கடி
ஆனால் பாடசாலை அதிபர் எனது மகனை சிறுவர் இல்ல பேருந்தில் வரக் கூடாது எனக்கூறியுள்ளார்.
எனது மகனை தினமும் குறித்த பேருந்தில் அனுப்புவது பொருளாதார நெருக்கடி மிக்க சூழலில் எனக்கு நன்மையாக இருந்தது. இதனால் நான் தொடர்ந்தும் குறித்த பேருந்தில் அனுப்பியிருந்தேன்.
இதன்காரணமாக காலை ஆராதனையில் தான் சொல்லியும் கேட்கவில்லை என்ற
காரணத்தினால் எனது மகனை அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் அதிபர்
கன்னத்தில் பலமாக அறைந்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட தொடர்ச்சியான வலி காரணமாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கு சிகிச்சைக்காக விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.



