எதிர்வரும் தினங்களில் பூமியை நோக்கி நகரும் சிறுகோள் - நாசா நிறுவனம் அறிவிப்பு
எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் திகதி புதிய வகை கோளொன்று பூமியை நோக்கி நகர உள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.
பூமியிலிருந்து இருபது லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இக்கோள் எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி பூமியை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சிறுகோளுக்கு நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ( 2001 FO32) என பெயரிட்டுள்ளனர்.இந்த சிறுகோள் (2001 FO32) பூமியை கடக்கும் போது மணிக்கு சுமார் 1,23,000 கிலோ மீற்றர் வேகத்தில் கடந்து செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் வராது எனவும், இச்சிறுகோள் பற்றி குறைந்த பட்ச தகவல்களை மாத்திரமே திரட்ட முடிந்ததாகவும் நாசா நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்த கோள் பூமியை கடந்து செல்லும் தருணத்தில் தான் இக்கோள் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
சூரியக் கதிர்கள் இக்கோளின் மீது படும்போது வெளியாகும் பிரதிபலிப்பின் மூலமே இந்த சிறுகோளின் தன்மையை தெரிந்துக்கொள்ள முடியும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.