இலங்கையில் பல பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மறைந்துள்ள அனைத்து பாதாள உலகக்குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளன.
டுபாய், இத்தாலி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளின் பல பில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனங்கள் உட்பட அனைத்து சொத்துக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவற்றினை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பாதாள உலக குழுவினர்
உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் மறைந்திருக்கும் 3320 பாதாள உலக குழுவினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடத்தல் மூலம் பெறப்பட்ட வீடுகள், வாகனங்கள், தங்க ஆபரணங்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகளின் அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வலையமைப்பையும் இலங்கையில் பாதாள உலகத்தையும் கட்டுப்படுத்தும் நூற்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் சொத்துக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா ஹோட்டல்கள்
இந்த பாதாள உலக தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சொந்தமான பல சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் செயற்பட்டு வருகின்றன.
எதிர்வரும் நாட்களில் இந்த சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் தொடங்கியுள்ளனர்.
இதேவேளை, இரண்டு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலக தலைவர்களின் 700 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 9 சொகுசு வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் எனவும் தேஷ்பந்து தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.