மட்டக்களப்பில் மிகப் பிரதான பேசுபொருளாக உள்ள மேய்ச்சல் தரையும்.. பண்ணையாளர்களும்..
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகப் பிரதான பேசுபொருளாக இருப்பது மயிலத்தமடு மாதவணை மேய்ச்சற்தரை விடயம். யுத்தம் முடிவுற்ற காலம் தொட்டு இங்கு கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் கால்நடை வளர்ப்பாளர்கள் அயல் மாவட்ட அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களினால் மிகவும் பாதிப்பினை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
போராட்டமே வாழ்க்கையாகிப் போன தமிழர்களின் நிலைமை தமிழ் பண்ணையார்களையும் விட்டு வைக்கவில்லை. யுத்தம் மௌனிக்கப்பட்டாலும், தமது வாழ்வாதாரத்திற்கான போராட்டத்தினை அப்பகுதியில் தினம் தினம் பண்ணையாளர்கள் முன்னெடுத்துக் கொண்டே வருகின்றார்கள்.
பாரியதொரு அரசியல், சமய பின்புலத்துடன் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களிடமிருந்து தங்கள் கால்நடைகளையும், கால்நடை மேய்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களையும் பாதுகாப்பது பாரிய சவலானதொன்றாக இவர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.
எத்தனையோ பேர் எத்தனையோ கள விஜயங்களை மேற்கொண்டும் இதற்கான தீர்வுகள் வழங்கப்படவில்லை.
2012ம் ஆண்டு தொடக்கம் 2017ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மாகாணசபையூடாக இந்த விடயத்தில் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களைக் கட்டுப்படுத்தி அவர்களுக்கெதிராக வழங்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவும் முடிந்திருந்தாலும்.
மாகாண சபை கலைந்ததன் பின்னர் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் வருகை இன்னும் பெருகியது. அதிலும் 2019ம் ஆண்டு புதிய ஜனாதிபதியின் வருகை அதனைத் தொடர்ந்து 2020ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் அது வீரியம் பெற்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்க காலத்திலேயே பண்ணையாளர்களுக்கும், அவர்களின் காலநடைகளுக்கும் அநீதிகள் பல இளைக்கப்பட்டு, கால்நடைகளும் சுட்டுக் கொல்லப்பட்டன.
இது தொடர்பில் பொலிஸ், வனவள திணைக்களம், மகாவலி அதிகாரசபை என எங்கு முறைப்பாடு செய்யப்பட்டும் எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
2021ம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தம் கருணாகரம், இரா.சாணக்கியன் ஆகியோரினால் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தாரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஊடாக கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
ஜனாதிபதியின் கோரிக்கை
இதன் பிரகாரம் 2022.07.06ம் திகதி மயிலத்தமடுவில் அத்துமீறி குடியேறி பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என மகாவலி அதிகாரசபைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதுவரை அது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தங்களது கால்நடைகளுக்கான பாரம்பரியமாக மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தி வரும் மயிலத்தமடு மாதவணை மேய்ச்சற்தரையினைக் கோரியும், அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் நடவடிக்கைகளை நிறுத்தக் கோரியும் பலவாறான போராட்டங்களை மேற்கொண்ட பண்ணையாளர்கள் தற்போது தீர்வு கிடைக்கும் வரையிலான தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.
இப்போராட்டம் காரணமாக கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இப்பிரதேசத்தில் பொலிஸ் காவலரண் ஒன்றை அமைப்பதான தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் இது குறித்த பிரச்சினைக்கு எவ்விதத்தில் தீர்வாக அமையும் என்பது கேள்வியே.
தங்களின் மேய்ச்சற்தரை கோரிய அறவழிப் போராட்டத்தின் கோரிக்கையை ஜனாதிபதி அவர்கள் ஏற்று நடவடிக்கை எடுத்து உரிய தீர்வினை வழங்க வேண்டும் என்பதே அவர்களின் வேண்டுகோள். ஏனெனில் இந்த விடயத்தில் எந்த திணைக்களத்தின் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதே கால்நடை வளர்ப்பாளர்களின் நிலைப்பாடு.
இந்தப் பிரதேசம் மகாவலி அதிகாரசபைக்குட்பபட்டதா? வன இலாகாவிற்கு உட்பட்டதா? என்ற கேள்விகளுக்கு மத்தியிலே தீர்வு எட்டப்படுவதற்கு பல இழுத்தடிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலே மகாவலி அதிகாரசபைக்குள் மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளே உள்ளடங்குகின்றன. ஏறாவூர்ப்பற்று, கோரளைப்பற்று தெற்கு, கோரளைப்பற்று மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள காணிகள் மகாவலிக்குள் உள்வாங்கப்படுகின்றது.
அதிலும் ஏறாவூர்ப்பற்றில் 1829 ஹெக்ரேயர் காணிகளையும், கோரளைப்பற்று மேற்கில் 12570 ஹெக்ரேயர் காணியும், கோரளைப்பற்று தெற்கில் 27943 ஹெக்ரேயர் காணிகளும் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ளது.
பொய்யான விடயங்கள்
இது முழுவதிலும் 3025 ஹெக்ரேயர் மேய்ச்சற் தரைக்கென்றும், 2700 ஹெக்ரேயர் நெற் பயிர்ச்செய்கைக்கும், 6712 ஹெக்ரேயர் இயற்கைத் தோட்ட செயற்பாடுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதில் 1148 ஹெக்ரேயர் மக்களைக் குடியமர்த்துவதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
மகாவலி அதிகார சபைக்குள் உள்வாங்கப்படுகின்ற வனவள காணிகள் 24708 ஹெக்ரேயர். இவ்வாறே மகாவலி அதிகார சபைக்குட்படுத்தப்பட்ட காணிகள் வகுக்கப்படுகின்றன.
2020.11.10ம் திகதி புற்தரைக் காணிகளை பிரதேச செயலாளர்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. இப்புற்தரைக் காணிகளை மகாவலி அதிகாரசபை கையகப்படுத்துவதற்கு முன்னர் நீர் விடப்பட்டு மிகச் செழிப்பாகவே இருந்தது.
இதில் மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் மயிலத்தமடு என்று பிரயோகிக்கும் காணியானது கோரளைப்பற்று தெற்கு மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காணிகளே.
இதில் ஏறாவூர்ப்பற்றினுள் சுமார் 4000 ஏக்கர்களும், கோரளைப்பற்று தெற்கில் சுமார் 1000 ஏக்கர் காணிகளுமே பண்ணையாளர்களால் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தப் பிரச்சினைகள் ஏற்படுவதும் இந்த குறிப்பிட்ட பிரதேசத்திற்குள் தான்.
ஆனால், இதனை அறியாதவர்கள் சொல்வது போல் பத்தாயிரம், பதினைந்தாயிரம் ஏக்கர் என்று சொல்வதெல்லாம் பொய்யான விடயங்களாகும்.
இதனைத் தாண்டிய பகுதிகள் வனப்பகுதிகளாகும். இக்காட்டுப் பகுதிக்குள் பண்ணையாளர்கள் கால்நடைகளை மேய்ப்பதென்பது முடியாத காரியம், பாரிய காட்டுப்பகுதி, கொட்டில்கள் அமைக்க முடியாது. வன விலங்குகளின் பிரச்சினைகள் காணப்படும். இதன் காரணமாக அவர்கள் அப்பகுதிகளுக்குள் மேய்சற்தரை கேட்க முடியாது.
ஆவணம் இல்லை
எனவே அவர்கள் தற்போதிருக்கும் சுமார் 5000 ஏக்கர் பரப்பு கொண்ட பகுதியையே கோரி நிற்கின்றார்கள். அதே நேரம் அத்துமீறிய பயிர்ச்செய்கை மேற்கொள்பவர்களும் தங்கள் பயிர்ச்செய்கையை மேற்கொள்வது இந்த 5000 ஏக்கர் காணியினுள் தான். இவ்வாறு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு இத்தனை ஏக்கர் என்றோ, இத்தனை பேர்தான் என்றோ எந்த வரையறையும் இல்லை.
நாளுக்கு நாள் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் விரிவாக்கத்திற்கு அளவு இல்லை. அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஏக்கர் அளவுகளும் இல்;லை. எழுந்தமானமாக அவர்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபடலாம். கால்நடை வளர்ப்புக்கும், பயிர்ச்செய்கைக்கும் நடுவில் வேலி அமைத்து பிரித்து செய்வதென்பதெல்லாம் சாத்தியப்பாடு இல்லாத ஒரு விடயம்.
இதில் அத்துமீறிய விவசாயிகளுக்கு காணி அளவு எவ்வளவு, எத்தனை விவசாயிகள் என்ற வரையறையைக் காண வேண்டும். மயிலத்தமடு பிரதேசமானது மாவட்டத்தினதும், மாகாணத்தினதும் எல்லைகளை உள்ளடக்குகின்றது. பொலனறுவை மாவட்டம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடையே மாதுறு ஓயா ஆறு எல்லையாக இருக்கின்றது.
இதுவே கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கிடையிலான எல்லையாகவும் இருக்கின்றது. மறுபக்கம் அம்பாறை மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குமான எல்லை. அதுவும் ஒரு ஆற்றினூடான எல்லையாகவே இருக்கின்றது. இது மண்டானை ஆறு என்று சொல்லபப்படுகின்றது. சிங்கள இனத்தவர்கள் இதனை திக்காகல அல என்று சொல்லுகின்றார்கள்.
இந்த மண்டானை ஆற்றினை கிழக்குப் பக்கம் இருந்து பார்க்கும் போது இந்த ஆற்றின் வலது பக்கம் மட்டக்களப்பு மாவட்டம் இடது பக்கம் இருப்பது அம்பாறை மாவட்டம். இந்த ஆற்றின் இடது பக்கத்தில் இருந்து ஆரம்பிப்பதே பெரும்பான்மையினத்தவரால் திவுல்பொத்தான என்று சொல்லப்படும் கிராமம்.
திவுல்பொத்தான என்று சொல்லப்படும் கிராமம் அம்பாறை மாவட்டத்திற்குரியது. அது மட்டக்ளப்பு மாவட்டத்திற்குள் இருப்பதான எந்த ஒரு ஆவணமும் இல்லை. இது அம்பாறை மாவட்டத்திற்குள் இருந்த கிராமம். இவ்வாறாக அந்த அம்பாறை பகுதிக்குள் பல்லாயிரம் ஏக்கர் அளவில் பரந்த காடு அற்ற பகுதி இருக்கின்றது. இதற்குள் எவரும் பயிர்செய்கையில் ஈடுபடுவதில்லை. இதேவேளை கால்நடை வளர்ப்பாளர்களும் மாடுகளை அப்பிரதேசத்திற்குக் கொண்டு செல்லப் போவதும் இல்லை.
ஏனெனில் ஆற்றைக் கடந்து அவர்கள் செல்லப்போவதில்லை. அது வேறு மாவட்டம், வேறு காட்டுப்பகுதி, வேறு மாவட்ட வனஇலாகா பகுதி. இதனால் அங்கு மாடுகளை மேய்ப்பதற்குச் சாத்தியம் இல்லை. எனவே பண்ணையாளர்கள் மாடுகளை மேய்க்கும் சுமார் ஐந்தாயிரம் ஏக்கரினுள்ளும் பண்ணையாளர் சங்கத்தின் கணக்கின் பிரகாரம் 972 பண்ணையாளர்களும் சுமார் இரண்டரை இலட்சம் கால்நடைகளை மேய்ப்பதாகவே சொல்லுகின்றார்கள்.
தற்போது அந்த மேய்ச்சற்தரை என்பது தனியவே ஏறாவூர்ப்பற்றுக்குரிய பண்ணையாளர்கள் மாத்திரம் மாடுகள் மேய்க்கும் இடமும் அல்ல.
உற்பத்தி அளவு பல மடங்கு அதிகமாகும்
இதில் கோரளைப்பற்று, கோரளையப்பற்று மேற்கு, ஆயித்தியமலை, வவுணதீவு என்ற அனைத்து இடங்களிலும் உள்ள பண்ணையாளர்களும் மேய்க்கலாம். இதேவேளை அம்பாறை, பொலனறுவை மாவட்ட பண்ணையாளர்களும் கால்நடை மேய்ப்பில் ஈடுபடுகின்றார்கள்.
இதில் எந்தவொரு இன வேறுபாடும் இல்லாமல் மேய்ச்சற்தரையாக பாவித்துக் கொள்ளலாம்.
இதேநேரம் இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் நெல் உற்பத்தியில் மூன்றாவது மாவட்டமாகத் திகழ்கின்றது.
தற்போது விதைப்பு காலம் இந்த நேரத்தில் பண்ணையாளர்கள் தங்கள் கால்நடைகளை வயல் பகுதிகளில் இருந்து அகற்றாமல் விடுவார்களாக இருந்தால் பண்ணையாளர்களுக்கும், மாவட்ட விவசாயிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படும். கால்நடைகள் பயிர்களை அழிக்கும்.
அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இது தொடர்பான முறைப்பாடுகள் அதிகமாகப் பதிவாகும். கிரான், வந்தாறுமூலை கரடியனாறு, வவுணதீவு போன்ற கமநல நிலையங்களுக்குட்பட்ட வயற் பிரதேசங்களுக்கு இத்தகு கால்நடைகளினால் ஏற்படும் பாதிப்பு இடம்பெறும்.
இதற்கும் மேலாக முறையான முறையில் மேய்ச்சற் தரை வழங்கப்படாததன் காரணத்தினாலேயே பண்ணையாளர்களினால் உற்பத்தி செய்யப்படும் பால் உற்பத்திகளின் அளவு குறைந்து காணப்படுகின்றது.
இவர்களுக்கு சரியான முறையில் மேய்ச்சற் தரையினைக் கொடுத்தால் கால்நடைகள் மூலம் அவர்களின் பால் உற்பத்திகளை தற்போதுள்ள அளவை விட மேலும் பல மடங்கு அதிகரிக்க முடியும்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் நூறு வீத இறைச்சித் தேவை மற்றும், அயல் மாவட்டங்களான அம்பாறை, பொலநறுவை மாவட்டங்களின் இறைச்சித் தேவையினையும் இதன் மூலம் நிவர்த்திக்க முடியும். தற்போது கால்நடைகளுக்கான மேய்ச்சற் தரையைக் கொடுத்து கால்நடைகளை உரிய இடத்திற்கு அனுப்பாமல் விடின் மாவட்டத்தின் நெல் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படும்.
மயிலத்தமடுவில் அத்துமீறிச் செய்கை பண்ணும் உற்பத்தியின் அளைவை விட மாவட்டத்தின் உற்பத்தி அளவு பல மடங்கு அதிகமாகும். எனவே ஒரு பாதிப்பு ஏற்படும்போது மயிலத்தமடு அத்துமீறிய செய்கையாளர்களின் உற்பத்தியை விட எத்தனையோ மடங்கு பாதிப்பினை இங்குள்ள விவசாயிகள் அனுபவிப்பார்கள்.
எனவே மயிலத்தமடுவில் அத்துமீறிய பயிர்செய்கையாளர்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படின் அது கால்நடைகள் வளர்ப்பாளர்களுக்கு மாத்திரமல்ல மாவட்டத்தின் விவசாயச் செய்கையிலும் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும். இங்கு ஏற்படுத்தப்படும் பாதிப்பினை விட மயிலத்தமடுவில் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களினால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்தி அளவு மிக மிக குறைவாகும்.
20 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம்
இதே நேரம் மாடுகளை மேய்க்கக் கூடிய மேட்டு நில வசதியும் மயிலத்தமடுவிலேயே இருக்கின்றது. காட்டுக்குள் சென்று மாடுகளை மேய்க்க முடியாது. காட்டுக்குள் இலைகள் இருக்கும் புல் இருக்காது. இலைகளை மாடுகள் அதிகம் சாப்பிடாது.
மயிலத்தமடுவில் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்கள் காலத்துக்கு வருவதும் போவதுமே பிரச்சினை. அதிலும் சுமார் பதினைந்து இருபது குடும்பங்கள் மட்டில் நிரந்தரமாக அங்கு இருக்கின்றார்கள்.
இவர்களின் ஊடாக ஐந்தில் இருந்து இருநூறாக மாறி தற்போது ஆயிரத்தில் வந்து நிற்கின்றது. இதுவே கடந்த இரண்டு வருடங்களுக்குள் இடம்பெற்றது. கடந்த 2020ல் அவர்கள் இறுதியாக பயிர்செய்த எல்லை தொப்பில்கல் மலை எல்லையாகும்.
அது வன இலாகாவிற்குச் சொந்தமானது. இவ்வாறான நிலைமைகளில் அங்கு பயிர்ச்செய்கையும் செய்யலாம், கால்நடைகளும் வளர்க்கலாம் என்பது சாத்தியமில்லாத விடயம். இப்பகுதியானது 1930 காலப்பகுதிகளில் வன இலாகாவிற்கு உரித்தானதாக சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டது.
இதன் பின்னர் 1978களின் பின்னர் மகாவலிச் சட்டம் வந்ததும் வன இலாகாவிற்குரிய பகுதிகளை மகாவலி அதிகார சபைக்குள் உள்ளெடுத்து சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மகாவலி சட்டத்தின் படி இப்;பகுதிகளில் வன இலாகாவின் சட்டம் வலுவற்றதாக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான நடைமுறைகளுக்கு மத்தியில் பண்ணையாளர்கள் தங்களின் கால்நடைகளை மேய்ப்பதற்கான இடத்தினைக் கோரி தற்போது 20 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.
இவர்களுக்கான தீர்வு கிடைக்குமா என்ற கேள்விகளும், ஏக்கங்களும் பண்ணையாளர்களுக்கு மாத்திரமல்லாமல் மாவட்டத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கு எழுந்திருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினைப் பிரதிநித்துவப்படுத்தும் மூன்ற அரசியல்வாதிகளும், தேசியம் சார்ந்த இரண்டு அரசியல்வாதிகளும் இது தொடர்பில் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும், பண்;ணையாளர்களுக்கான தீர்வு இன்றுவரைக்கும் எட்;டப்படவில்லை.
எது எவ்வாறாக இருந்தாலும் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயிகளும் சேர்ந்தே இந்தப் பிரச்சினையினூடாகப் பாதிக்கப்படப் போகின்றார்கள் என்பது தெட்டத் தெளிவாக விளங்குகின்றது.
எனவே இந்தப் பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதி உட்பட அரசாகம் ஒரு தீர்க்கமான முடிவினை வழங்காமல் விட்டால் கிழக்கில் பொருளாதார அபிவிருத்திக்கு முதுகெலும்பாக இருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயிகள், கால்நடை பண்ணையாளர்கள் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளுக்குள் முகங்கொடுத்து அது மாகாணத்தின் மட்டுமல்ல நாட்டின் பொருளாதாரத்திலும் பாரியதொரு பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதே உண்மை.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் P.Sasikaran அவரால் எழுதப்பட்டு, 17 October, 2023 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.