ரணிலின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட விவகாரம்..! நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட திருப்பம்
புதிய இணைப்பு
2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட “அரகளைய” மக்கள் போராட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட ஆறு பேர் நேற்று (07) விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணை சுமார் நான்கு ஆண்டுகளாக இடம்பெற்று வந்த நிலையில், 2026 ஒக்டோபர் 7ஆம் திகதி (நேற்று) வழங்கப்பட்ட தீர்ப்பு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி
அதாவது, 2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக அன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசியல் தலைமைகளை பதவி விலகக்கோரி “அரகளைய” மக்கள் பெருமளவில் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் விளைவாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனியார் இல்லம் தீக்கிரையாக்கப்பட்டடது.
சம்பவம் தொடர்பாக பலர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த வழக்கில் 2022 ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவும் சந்தேகநபராக பெயரிடப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பில் அவர் மீது வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் ஜே. ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட ஆறு பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், இந்த வழக்குடன் தொடர்புடைய 29 சந்தேகநபர்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையும் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சமூக ஆர்வலர் பியத் நிகேஷல, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட ஆறு பேர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நேற்று (07) விடுவிக்கப்பட்டனர்.
பயணத் தடைகள்..
2022ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி அரகலய போராட்டத்தின் போது இடம்பெற்ற இந்தத் தீ வைப்புச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டிருந்த பலரும் ஏற்கனவே சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எஞ்சிய 6 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன், இவ்வழக்குடன் தொடர்புடைய 29 சந்தேகநபர்களுக்கும் எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையும் சுமார் 29 மாதங்களின் பின்னர் நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டது.
Bigg Boss 10: டிடிஎஃப்-ற்கு எதிராக முனியம்மா போட்ட முகமூடி... வெளியேறும் இரண்டு போட்டியாளர்கள் Manithan