நாட்டின் பல்வேறு பகுதிகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பலர் கைது
நாட்டின் பகுதிகளில் குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட பல கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வடமராட்சி
அந்த வகையில், திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும், வடமராட்சி - குடத்தனை, மாளிகைத்திடல் பகுதியை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்றின் சொத்துக்கள், ஆவணங்கள், தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை திருடிய சம்பவத்தின் சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட நாட்களாக பொலிஸார் வலைவீசி வந்த நிலையில் நேற்று இரவு அதிரடியாக மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் கைது செய்ய சென்ற பொலிஸாரை தாக்கியதுடன் தப்பி ஓட முயன்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குறித்த நபரை மருதங்கேணி பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி - கஜி
கிளிநொச்சி
மேலும், கிளிநொச்சியில், சந்தேகத்திற்கிடமாக வீடு ஒன்றில் தங்கியிருந்த இரு பெண்களையும் சிறுமி ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த வீட்டில் வைத்து குறித்த சிறுமி தவறான நடத்தைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
செய்தி - யது
வாழைச்சேனை
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை மற்றும் ஓட்டுமாவடி பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 4 போதைபொருள் வியாபாரிகளை 12 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின், 2 கிராம் ஜஸ்போதை பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் விசேட அதிரடிப்படையினர் இன்று (06) அதிகாலையில் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலையிலுள்ள விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விஆசட அதிரடிப்படையினர் இன்று அதிகாலை 2.00 மணிக்கு குறித்த பிரதேசங்களிலும் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்களின் வீடுகளை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
செய்தி - பவன்
சம்மாந்துறை
அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தில் மணல் கடத்திய சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் நேற்று (06) இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸார் அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமாக மணல் கடத்திய சந்தேக நபர் உட்பட மணல் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
அதேவேளை, 5000 ரூபா போலி நாணயத்தாளுடன் அடகு நகை மீட்கச் சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியில் திங்கட்கிழமை (6) இடம்பெற்றுள்ளது.
செய்தி - பாறுக் ஷிஹான்