கைது செய்யப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் 22 பேர் பாம்பன் துறைமுகத்தை அடைந்தனர்
எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பாம்பன் பகுதி கடற்தொழிலாளர்கள் 22 பேர் இரண்டு நாட்டுப்படகுகளுடன் பாம்பன் துறைமுகத்தை சென்றடைந்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம், மற்றும் பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த 22 பேர் நேற்று பகல் 2 மணியளவில் பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்து எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்தொழிலாளர்கள் தொடர்பில் எடுக்கவிருந்த நடவடிக்கை
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் இரவு மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தி பின் யாழ்ப்பாணம் கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருந்த நேரத்தில், நேற்று இரவு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடற்தொழிலாளர்கள் குடும்பங்களின் கோரிக்கையை ஏற்று வெளியுறவு துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கிச் சொல்லியதாக கூறப்படுகிறது.
இந்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை அரசு நல்லிணக்க அடிப்படையில் நள்ளிரவில் 11.30 மணியளவில் சிறைபிடிக்கப்பட்ட 22 கடற்தொழிலாளர்களையும் இரண்டு நாட்டுப்படகுடன் விடுவிக்க இலங்கை கடற்படை உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து கடற்தொழிலாளர்களையுமு் படகுகளையும் சர்வதேச கடல் எல்லை வரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து சர்வதேச எல்லை கடலில் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகளிடம் இலங்கை கடற்படை அதிகாரிகள் 22 கடற்தொழிலாளர்களையுமு் படகுகளுடன் இந்திய கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இந்திய கடலோர காவல் படையினர் கடற்தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து சொந்த ஊருக்கு செல்ல கூறிய நிலையில் இன்று பகல் 1 மணியளவில் அவர்கள் பாம்பன் துறைமுகம் வந்தடைந்துள்ளனர்.
கடற்தொழிலாளர்கள் கூறும் விடயம்
விடுவிக்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் கூறும்
பொழுது, இரண்டு நாட்களாக கடலில் மழை திசை தெரியவில்லை. ஆகவே இலங்கை கடல்
பகுதிக்குள் தெரியாமல் சென்று விட்டோம்.
அத்துடன் இதனை இலங்கை கடற்படையிடம் சொன்ன போதும் அவர்கள் கேட்கவில்லை. ஆகவே எங்களை கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென நள்ளிரவில் நீங்கள் எல்லாம் விடுவிக்கப்பட்டுள்ளீர்கள் உங்கள் அரசு விடுவிக்க சொல்லி இருக்கு என கூறியதால் மகிழ்ச்சி அடைந்தோம்.
அதன் பின் இலங்கை கடற்படை எங்களை பாதுகாப்போடு அழைத்து வந்து இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தனர்.
நாங்கள் வரும்பொழுது காற்று மழை காரணமாக காலதாமதம் ஆகி தற்போது தான் வந்து சேர்ந்தோம். எங்களையும் எங்கள் படகுகளையும் விடுவித்த இந்திய அரசுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



