சட்ட விரோதமாக மாலைதீவு செல்ல முயன்ற பங்களாதேசை சேர்ந்தவர் தனுஷ்கோடியில் கைது
சட்டவிரோதமாக மாலைதீவு செல்ல முயன்ற பங்களாதேசைச் சேர்ந்த நபர் ஒருவரை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் வைத்து தனுஷ்கோடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்ட அவரிடம் உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை (27) காலை சந்தேகத்திற்கு இடமான முறையில் அரிச்சல்முனை கடற்கரையில் நடமாடிய பங்களாதேசைச் சேர்ந்த நபர் குறித்து தனுஷ்கோடி மீனவர்கள், தனுஷ்கோடி காவல் நிலைய தனிப்பிரிவு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தனிப்பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அரிச்சல் முனை கடற்கரைக்கு விரைந்து சென்ற பொலிஸார் பங்களாதேசைச் சேர்ந்த திலீப் நாராயணனை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் அவர் கடன் பிரச்சனை அதிகமாக இருப்பதால் வேலை தேடி படகில் சட்ட விரோதமாக மாலைதீவு செல்வதற்காக பங்களாதேசை சேர்ந்த குலாம் என்ற முகவரிடம்; பணம் கொடுத்ததாகவும் அவர் ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து தனுஷ்கோடி வழியாக மாலைதீவுக்கு படகில்; சென்று விடலாம் எனக் கூறியதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை கொல்கத்தாவிலிருந்து பேருந்தில் புறப்பட்டு மதுரை வந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து பேருந்தில் நேற்று திங்கட்கிழமை இரவு ராமேஸ்வரம் வந்ததாகவும், பின்னர் தனுஷ்கோடி செல்லும் பேருந்து இல்லாததால் சாலை மார்க்மாக நடந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வந்ததாகக் கூறியுள்ளார்.
இதனையடுத்து திலீப் நாராயணனை கைது செய்த பொலிஸார் தனுஷ்கோடி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட திலீப் நாரயண் மீது சந்தேகம் உள்ளதால் இவர் மாலைதீவு செல்ல தனுஷ்கோடி வந்தாரா? அல்லது இலங்கைக்குப் போதைப் பொருள் கடத்துவதற்காக வந்த போது பொலிஸாரிடம் சிக்கினரா என்பது குறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட திலிப் நாராயணனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்குப் பின்னர் திலீப் நாராயணனை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.