பெசில் ராஜபக்சவை கைது செய்யுமாறு உத்தரவு
முன்னாள் அமைச்சர் பெசில் ராபஜக்சவை கைது செய்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாத்தறை பிரதான நீதவான் சதுரங்க எரங்க திசாநாயக்கவினால், பெசிலுக்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு ஒன்றில் முன்னிலையாகத் தவறியதனால் இவ்வாறு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை எலியகந்த வீதி பிரவுன்ஸ்ஹில் என்னும் முகவரியில் காணப்படும் ஒன்றரை ஏக்கர் காணியை கொள்வனவு செய்தமை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் மாத்தறை நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதன் காரணமாக இந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெசில் ராபஜக்ச சுகவீனமுற்றிருப்பதாகவும், வெளிநாடொன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனால் அவரினால் நீதிமன்றில் முன்னிலையாக முடியவில்லை எனவும் அவரது சட்டத்தரணி அனில் டி சில்வா தெரிவித்துள்ளார்.
பெசில் நோய்வாய்ப்பட்டிருப்பதனால் விமான சேவை நிறுவனங்கள் அவரை பாதுகாப்பாக அழைத்து வரும் பொறுப்பினை ஏற்க மறுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொடர்ச்சியாக நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதனால் பெசிலுக்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிப்பதாக நீதவான் அறிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் ஈட்டிய பணத்தைக் கொண்டு காணி கொள்வனவு செய்துள்ளதாக பெசில் ராபஜக்ச மற்றும் அவரது மனைவியின் சகோதரி உள்ளிட்ட சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 21ம் திகதி பெசில் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறினால் பிணை தொகையை அரசுடமையாக்குவது குறித்து ஆராயுமாறு நீதவான் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் பெசில் ராபஜக்சவின் வெளிநாட்டுப் பயணங்களும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதேவேளை, பெசில் ராஜபக்ச கடந்த ஒன்றரை வருடங்களாக ஒரே மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்து நீதிமன்றை பிழையாக வழிநடத்துகின்றார் என சட்ட மா அதிபர் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.