விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஆழ ஊடுருவும் தாக்குதல்கள்! சரத் பொன்சேகா வெளியிடும் தகவல்
கொழும்பு “மில்லேனியம் சிட்டி”யில் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்யப்பட்டமையானது எந்த விதத்திலும் சட்டவிரோதமான செயல் அல்ல என இராணுவ வீரன் என்ற வகையில் கூறுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த இடத்தில் ஆயுதங்களை வைத்திருந்தமையானது இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் செய்த முறைகேடான நடவடிக்கை. அந்த சம்பவத்தை ஒரு அரசாங்கத்தின் மீது சுமத்தி சேறுபூச ஆளும் கட்சியினர் எப்போதும் முயற்சித்து வந்துள்ளனர்.
இராணுவ புலனாய்வுப் பிரிவினர் எப்போதும், ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. இதனால், கொழும்புக்கு ஆர்.பி.ஜீ. கிளைமோர் குண்டுகளை கொண்டு தேவை இருக்கவில்லை.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஆழ ஊடுருவும் தாக்குதல்களை இராணுவத்தின் விசேட படைப் பிரிவினரே மேற்கொண்டனர்.
மில்லேனியம் சிட்டி சம்பவம் நடந்த போது, நான் யாழ்ப்பாண பிராந்திய இராணுவ கட்டளை தளபதியாக இருந்தேன். இராணுவத்தினர் சிலரை பயன்படுத்தி அன்று அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுத்தனர் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.