கோவிட் காலத்தில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த இராணுவ அதிகாரி
இலங்கையின் முன்னணி இராணுவ அதிகாரிகளில் ஒருவர் கோவிட் கால தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரளவின் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.
வங்கிக்கணக்கில் பணவைப்பு
கடந்த இரண்டரை வருடங்களாக கோவிட் நோயாளிகளையும் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருகின்றவர்களையும் தனிமைப்படுத்தி அதனைக் கண்காணிக்கும் பொறுப்பு இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் நபர்கள் ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் அவர்கள் ஹோட்டல் அறை மற்றும் உணவுகளுக்காக மட்டும் நாளாந்தம் 14 ஆயிரம் வரை செலுத்த வேண்டியேற்பட்டிருந்தது.
அவ்வாறு செலுத்தப்பட்ட தொகையில் ஆயிரம் ரூபா வீதம் நாளாந்தம் இராணுவ அதிகாரி ஒருவரின் மனைவியின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றம்சாட்டியுள்ளார்.