அரச வைத்தியசாலையில் வைத்திய சேவைக்கு இடையூறு ஏற்படுத்திய இராணுவ மேஜர் கைது
நுவரெலியா(Nuwereliya) மாவட்ட பொது வைத்தியசாலையில் திடீரென உள் நுழைந்து வைத்திய சேவைக்கு இடையூறு ஏற்படுத்தி வன்முறையில் ஈடுபட்ட இராணுவ முன்னாள் மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் , விடுமுறைக்காக நுவரெலியாவுக்கு வருகை தந்த நிலையில் பலத்த பலத்த காயங்களுடன் இன்று (18) நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.
ஊழியர்களோடு வாக்குவாதம்
இதன் போது வைத்தியசாலையில் அனுமதிக்கும் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளை பிரயோகித்து வைத்திய சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளார்.
பின்னர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திர சேனவிரத்ன சம்பவ இடத்திற்கு வருகை தந்த போது அவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து வைத்தியசாலையில் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக வைத்தியசாலை நிர்வாகம் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து நுவரெலியா பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வைத்திய சேவைகளுக்கும் இடையூறு
குறித்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திர சேனவிரத்னவிடம் வினவியபோது,
அவர் நுவரெலியாவில் ஏதோ ஒரு இடத்தில் தங்கி இருந்து கீழே விழுந்து பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு வருகை தந்த இராணுவ மேஜர் என கூறிக்கொண்ட நபர் ஆரம்ப பிரிவில் அனுமதிக்கும் போது கனிஷ்ட ஊழியர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வைத்திய சேவைகளுக்கும் இடையூறு ஏற்படுத்திய காரணத்தால் குறித்த நபரை கைது செய்து பொலிஸாரின் பாதுகாப்புடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அத்துமீறி வைத்தியசாலை உள் நுழைந்து வைத்தியர்கள் மற்றும் சுகாதர ஊழியர்களின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குறித்த இராணுவ மேஜர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |