கொழும்பில் பதற்றம்! காலிமுகத்திடல் பகுதியில் இராணுவத்தினருடன் சிவில் உடையில் களமிறங்கியுள்ள நபர்கள்
இராணுவத்தினரின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ள இளைஞர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறாத வண்ணம் கோட்டா கோ கம பகுதியை சுற்றியுள்ள அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில்,கோட்டா கோ கம பகுதிக்கு தற்போது பொலிஸ் உயரதிகாரிகளின் பாதுகாப்புடன் துப்பரவுப்பணியாளர்கள் அழைத்து வரப்பட்டு எஞ்சியிருக்கும் கூடாரங்கள் மற்றும் தடயங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது போராட்டக்களத்திலிருந்த சட்டத்தரணி ஒருவர் உட்பட 10 போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், காலிமுகத்திடல் பகுதிக்கு சிவில் உடையணிந்த இராணுவத்தினர் நூற்றுக்கணக்கானோர் சற்று முன்னர் வருகை தந்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் நூற்றுக்கணக்கானோர் திடீரென நுழைந்துள்ளமையினால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோட்டா கோ கம போராட்டக்காரர்களையும் அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும்,இராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல் நிலவியுள்ளதுடன்,போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது இராணுவத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மூன்று போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் மீது இராணுவத்தினர் கொடூரமான முறையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், அவர்களை இராணுவத்தினர் அழைத்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை,காலிமுகத்திடல் பகுதிக்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளதுடன்,காலிமுகத்திடல் பிரதேசத்திற்குச் செல்லக்கூடிய அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு முற்றாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
காலி வீதியில் கொள்ளுப்பிட்டி சந்தியின் சுற்றுவட்டத்தில் இருந்து பாதை மூடப்பட்டுள்ளதுடன்,ஷங்கிரிலா ஹோட்டல் அருகில் பாலதக்ஷ மாவத்தையும் குறுக்காக மறிக்கப்பட்டுள்ளது.
மறுபுறத்தில் சைத்திய வீதி, லோட்டஸ் வீதி என்பனவும் குறுக்காக மறிக்கப்பட்டு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலி முகத்திடல் பிரதேசத்தை நோக்கிச் செல்ல எந்தவொரு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுத்துள்ளதுடன்,செல்ல முற்படும் சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.