சத்துருக்கொண்டான் படுகொலை : இராணுவ முகாமில் அகழ்வாய்வு நடத்த மாநகரசபை தீர்மானம்
சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் குறித்த பகுதியில் இருந்த இராணுவம் முகாம் அகழ்வாய்வு செய்யப்படவேண்டும் என்பதுடன் சர்வதேசத்தின் கண்காணிப்பில் அதனை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு நேற்று(0.09.2026) மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.
முன்மொழிவுகளும் வாசிக்கப்பட்டு
மட்டக்களப்பு மாநகரசபையின் வழமையான சம்பிரதாயங்களுக்கு அமைவாக சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி நடைபெற்றது.

இதன்போது சத்துருக்கொண்டான் படுகொலையில் உயிர்நீர்த்தவர்களுக்காக மாநகரசபை உறுப்பினர்களினால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநகரசபை உறுப்பினர் தயாளகௌரியினால் இந்த சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநகரசபை முதல்வரின் தலைமையுரையினை தொடர்ந்து மாநகரசபையின் கடந்த கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு சபையின் அனுமதி பெறப்பட்டது.
அதனை தொடர்ந்து மாநகரசபையின் முன்மொழிவுகள் வாசிக்கப்பட்டு சபையின் அனுமதி பெறப்பட்டதுடன் மாநகரசபையின் நிலையியல் கட்டளைக்குழுக்களின் முன்மொழிவுகளும் வாசிக்கப்பட்டு வாதப்பிரதிவாதங்களுடன் அனுமதிகள் வழங்கப்பட்டன.
பிரேரணைக்கு ஆதரவு
இதன்போது பல்வேறு விவாதங்கள் நடைபெற்றதுடன் மாநகரசபையின் செயற்பாடுகள் குறித்தும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இன்றைய அமர்வின்போது சத்துருக்கொண்டான் படுகொலையின் பிரதான பங்கினைக்கொண்ட சத்துருக்கொண்டான் பொய்ஸ் கார்டன் படைமுகாமில் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்கவும் குறித்த படுகொலையின் பிரதான சூத்திரதாரிகளான படை பொறுப்பதிகாரி உட்பட இனங்காணப்பட்ட படையினர் மீது நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தும் விசேட பிரேரணையொன்று மாநகரசபை உறுப்பினர் தயாளகௌரியினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதன்போது குறித்த பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்கிய நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் பிரேரணை கொண்டு வந்தவர் முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்ததாகவும் ஏன் அக்காலப்பகுதியில் இந்த பிரேரணை கொண்டுவரப்படவில்லையென தெரிவித்தபோது அதற்கு எதிரான பல்வேறு கருத்துகள் இதன்போது தெரிவிக்கப்பட்ட நிலையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26