குருந்தூர்மலை குளத்தில் மீன்பிடிக்க சென்ற மக்களுக்கு தடை விதித்த இராணுவம்
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் குளத்தில் தூண்டில் போட்டு மீன்பிடிக்க சென்ற உள்ளூர் கிராம மக்களுக்கு இராணுவம் தடை விதித்துள்ளதோடு, மீன் பிடித்த ஆறுமுகத்தான் குளத்தினை சேர்ந்த கிராமவாசிகளை மிரட்டி அனுப்பியுள்ள சம்பவம் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்றதாக மீன்பிடிக்கச் சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த குருந்தூர் குளத்துக்கு அண்மையாகவுள்ள குருந்தூர் மலையில் தொல்லியல் ஆய்வுகளை இராணுவமும், தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொண்டு வரும் நிலையில் அப்பகுதியில் காவலரண் அமைத்துத் தங்கியுள்ள படையினர், வலைகளைக் கொண்டும் தூண்டில் போட்டும் குளத்தில் ஜப்பான் மீன்களைத் தாம் பிடித்து உண்டுவரும் நிலையில், உணவிற்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் தூண்டில் போட்டு மீன்பிடிக்கச் செல்லும் தம்மை அச்சுறுத்துவதாகக் கிராமவாசிகள் குற்றச்சாட்டினை முன்வைக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் மீன்பிடிக்கச் சென்றவர்களை அங்கு காவல் கடமையில் நின்ற இராணுவத்தினரின் ஏவலில் அவர்களோடு நின்ற பொலிஸார் இரண்டு பேர் மீன் பிடிக்கத் தடை செய்துள்ளனர்.
இதன்போது தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைக் குளத்தில் கட்டி மீன்பிடிக்கும் நடவடிக்கையில் அடையாளம் தெரியாதவர்கள் ஈடுபட்டிருந்ததாகவும், சட்டவிரோதமான அந்த நடவடிக்கையைத் தடுக்காத பொலிஸார் தூண்டில் போட்டு மீன்பிடிக்க வந்த தம்மை மிரட்டி தடை செய்ததாக கிராமவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இராணுவம் வலைகளைப் பயன்படுத்தி இதே குளத்தில் மீன்பிடித்து உண்ண முடியுமென்றால் இதே கிராம சேவகர் பிரிவில் வாழும் தாம் ஏன் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுவதாக ஆறுமுகத்தான் குள மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேவேளை இந்த குளம் அமைந்துள்ள பகுதிக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களைக் குள பகுதிக்கு செல்ல முடியாது என இராணுவத்தினர் தடைவிதித்ததோடு அனுமதி பெற்றுவந்தால் தான் குளத்துக்குச் செல்லலாம் எனத் திருப்பி அனுப்பியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.










யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 1 மணி நேரம் முன்

அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
