ஐ.தே.கட்சியில் இருந்து விலகிய அர்ஜூன ரணதுங்க: அவரது அடுத்த அரசியல் தரிப்பிடம் என்ன?
முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, (Arjuna Ranatunga) ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து அர்ஜூன ரணதுங்கவின் அடுத்த அரசியல் தரிப்பிடம் எது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ரணதுங்க முதலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
இதனையடுத்து 2010ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.
இதன் பின்னர் 2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு சென்ற அர்ஜூன ரணதுங்க அடுத்து இணைய போகும் இரண்டு அரசியல் நீரோட்டங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தி, அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அர்ஜூன ரணதுங்கவை ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டம் அல்லது கொழும்பு மாவட்டத்தில் தொகுதி அமைப்பாளராக நியமிப்பது குறித்து சஜித் பிரேமதாச கவனம் செலுத்தியிருந்தார்.
எனினும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜனநாயக தேசிய முன்னணியின் கீழ் போட்டியிட்ட களுத்துறை மாவட்டத்தின் அமைப்பாளராக நியமிப்பது பற்றி சஜித்தின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான கூட்டணியில் இணைவது குறித்தும் ரணதுங்க கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது.
அந்த கூட்டணியின் ஊடாக அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் நோக்கில் அவர், அதில் இணைவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக பேசப்படுகிறது.
அர்ஜூன ரணதுங்கவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் எதிர்பார்ப்பு உள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தன்னை பொது வேட்பாளராக நிறுத்தும் அவசியம் காலஞ் சென்ற மாதுளுவாவே சோபித தேரருக்கு இருந்தது என ரணதுங்க இதற்கு முன்னர் கூறியிருந்தார்.
இதனடிப்படையில் ரணதுங்க, ஐக்கிய மக்கள் சக்தி அல்லது மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான அரசியல் கூட்டணியில் இணைந்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளார்.
ரணதுங்க குடும்ப சகோதரர்களில் அர்ஜூன ரணதுங்கவுடன் நெருக்கமாக இருந்து வரும் ருவன் ரணதுங்க, ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியில இணைந்து விட்டார். அவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும், அர்ஜூன ரணதுங்கவின் சகோதரர்களில் ஒருவர்.
என்னை எப்படி அப்படி கூறலாம், கண்டிப்பாக புகார் அளிப்பேன்... சீரியல் நடிகை கம்பம் மீனா காட்டம் Cineulagam