மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் வெளியான அர்ஜுன மகேந்திரனின் புகைப்படம்..!
இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக தேடப்பட்டு வரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட மூத்த பத்திரிகையாளர் உவிந்து குருகுலசூரிய, மகேந்திரன் தன்னை, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்பு கொண்டதாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் முகநூலில் அவர் இட்ட பதிவில், மகேந்திரன் தன்னிடம் பல விடயங்கள் குறித்துப் பேசியதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் ஆலோசனை வழங்குமாறு கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் அதனை மறுத்து விட்டதாக கூறிய குருகுலசூரிய, உரையாடலில் மேலும் பல விடயங்கள் நடந்ததாக தெரிவித்துள்ளார்.
அநுரவின் வாக்குறுதி
சிங்கப்பூரில் வசிக்கும் மகேந்திரன், 2015 மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். இது அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி இழப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, மகேந்திரன் இலங்கையை விட்டு வெளியேறியபோது, அவர் சிங்கப்பூருக்கு ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள செல்வதாகவும் விரைவில் நாடு திரும்புவேன் என தன்னிடம் தெரிவித்ததாகவும் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
இருப்பினும், அந்த மோசடியின் பின்னர் அவர் ஒருபோதும் நாடு திரும்பவில்லை.
இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்துவந்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் பிரசார மேடைகளில் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



