தமிழ் தேசிய கட்சிகளிடம் அரியநேத்திரன் விடுத்துள்ள கோரிக்கை
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்த கருத்தை அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் கடைப்பிடித்து வடக்கு, கிழக்கில் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை அரசியலில் பிரித்தானியாவில் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதாக கூறப்படும் 1948 தொடக்கம் தற்போது 2025 வரை 76 ஆண்டுகள் ஆட்சி செய்த பிரதமர்களாக இருக்கலாம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளாக இருக்கலாம், அனைவருமே தமிழ் மக்களின் அபிலாசைகளை புறம்தள்ளி இனவாதிகளாக பௌத்தமதத்துக்கும், சிங்கள பேரினவாதத்துக்கும் துணைபோனவர்களாகவே ஆட்சி செய்கின்றனர்.
அநுர விதிவிலக்கில்லை
அதில் தற்போதைய ஜனாதிபதி அநுரவும் விதிவிலக்கில்லை என்பதையே திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மீண்டும் நிரூபித்துள்ளது. இரவு 8 மணிக்கு திட்டமிட்டு பௌத்த பிக்குகளால் வைக்கப்பட்ட புத்தர் சிலை அன்று இரவு 11 மணிக்கு அநுர அரசால் பொலிஸாரை கொண்டு அகற்றிய சம்பவத்தை தமிழ் மக்கள் ஆரோக்கியமான விடயமாகவும் நிறைவேற்று அதிகாரத்தை சரியாகவே ஜனாதிபதி அநுர கையாண்டுள்ளார் என கூறினர்.
ஆனால் மறுநாள் அந்த புத்தர் சிலையை பாதுகாப்புக்காவே எடுத்ததாகவும் மீண்டும் அதே இடத்தில் வைப்பதாகவும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியவிடயமும் மீண்டும் அதே பொலிசார் மேள தாளத்துடன் பகல்வேளை அந்த புத்தர் சிலை அதே இடத்தில் வைத்த விடயம் தேசிய மக்கள் சக்தி அரசும் ஏனைய இனவாதிகளுக்கு சோரம் போய்விட்டது என்பது கோடிட்டு காட்டிவிட்டது. இன்னும் ஒருபடி மேலே சென்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அவருடைய வழமையான இனவாதமும் அவருடைய பேச்சில் தெளிவாக வெளிப்பட்டது.

இது ஒரு பௌத்தநாடு மகாநாயக்கர்கள் மூவருடைய ஆலோசனை பெறாமல் எந்த அடிப்படையில் புத்தர் சிலை அகற்றப்பட்டது? அதை அகற்ற உத்தரவிட்டவர் யார்? என பேசினார்.
இவர் வீடமைப்பு கலாசார அமைச்சராக கடந்த 2015இல் நல்லாட்சியில் இருந்தபோது தான் வடக்கு, கிழக்கில் 1000 பன்சாலைகள் அமைப்பதாக அவர் கூறி 500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது.
அதே நல்லாட்சியில் எதிர்கட்சியாக இருந்து நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கிய எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா உட்பட எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதை எதிர்க்கவில்லை.
தேர்தல் தோற்கடிப்பு
அவ்வாறான இனவாத மதவாத சிந்தனை கொண்ட சஜித் பிரேமதாசவின் வரலாற்றை அறிந்தும் 2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரான என்னை (பா.அரியநேத்திரன்) தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தமிழரசுக்கட்சியில் உள்ள சிலருடைய சலுகைகளுக்காக ஒரு பிரிவினர் தனிநபர் கோரிக்கையை ஏற்று வெட்கம் இல்லாம் அவரை ஆதரித்தனர்.
அவரை ஆதரித்த பலனை திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் உணர்ந்திருப்பார்கள். தமிழரசுக் கட்சியில் சஜித்தை ஆதரித்த ஒவ்வொரு தமிழனுக்கும் முகத்தில் அவர் சேறுபூசிவிட்டார் என்பதே உண்மை. எதிர்வரும் 2026, 27ல் மகாணசபை தேர்தல் கதை எழுந்துள்ளது.
அதில் வடக்கு,கிழக்கு தமிழர்கள் ஓரணியில் செயல்பட வேண்டும் என்பதையும், தமிழ்மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றாக ஒரு குரலில் வரவேண்டும் என்பதை யாழ்ப்பாண பல்கலைகைக்கழக மாணவர்கள் அழுத்தம் திருத்தமாக வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
இதனை தமிழ்தேசிய கட்சிகள் கவனத்தில் எடுத்து கடைப்பிடிக்க தவறுவார்களானால் மாணவர்கள் அணிதிரண்டு நேரடியாக தமிழ்தேசிய கட்சிகளை குறிப்பாக தமிழரசுக் கட்சியையும் மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தைம் சூழல் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் கருத்தை ஏற்று செயல்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |