விடுதலைப் புலிகளின் தலைவரது பெயரைப் பயன்படுத்தி நாடாளுமன்றில் தன்னை தற்காத்துக் கொள்ளும் அர்ச்சுனா
முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக படுகொலை செய்த இலங்கை இராணுவத்தை பாதுகாக்கும் நிலைமைக்கு தேசிய மக்கள் சக்தி அரசு போயுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
தேசியத்தலைவர்
நான் உரையாற்றும் போது அமைச்சர் சந்திரசேகர் சபையில் இருப்பார் என நினைத்தேன்.
நாங்கள் சர்க்கஸ் கூடாரம் வைத்தாலும் அங்கு கழுதைகள், குதிரைகள் வந்த நின்றாலும் அவற்றுடன் சேர்ந்து படம் எடுப்பதற்கும் தயாராகத்தான் இருக்கின்றோம்.
ஆனால் அவ்வாறான கழுதைகளை எங்களின் தலைவராக ஏற்றுகொள்ள யாழ். மண்ணில் பிறந்த எந்த தமிழரும் தயாரில்லை.
யாழ்ப்பாணத்தில் பிறக்காத அமைச்சர் சந்திரசேகர் சண்டித்தனம் செய்து என்னை ஏதாவது செய்யலாமா என யோசிக்கலாம். 44 ஆயிரம் போராளிகள் உயிர் கொடுத்த எங்களின் தேசியத்தலைவரின் வழியில் நின்ற என்னை அச்சுறுத்தலாம் என அமைச்சர் ரா.சந்திரசேகர் நினைப்பது மிகவும் நகைச்சுவையானது.
படுகொலைகளுக்கான பொறுப்பு
எமது இனத்தை காத்த ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக இன்றுவரை போராடிக்கொண்டிருக்கின்றோம். அவரின் குழந்தைக்காக போராடிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்த அரசு கூட அவரை விடுதலை செய்யவில்லை.
படுகொலைகளுக்கான எந்த பொறுப்புக் கூறல்களும் இல்லை. யாழ்ப்பாணத்தில் 3000 வேலையில்லாத பட்டதாரிகள் இருக்கின்றார்கள். அவர்களுக்க உங்களினால் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்க முடியுமா?
எமது மக்கள் தவறுதலாக இந்த அரசின் 3 கத்தரித்தோட்ட வெருளிகளை தேர்வு செய்துவிட்டார்கள். இந்த 3 கத்தரித்தோட்ட வெருளிகளினால் யாழ்ப்பாணத்தில் ஏதாவது நடந்திருக்கின்றதா என்றால் இல்லை” என்றார்.
இதேவேளை, நடந்து முடிந்துள்ள பல நாடாளுமன்ற அமர்வுகளின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், ஏனைய சபை உறுப்பினர்களுடன் முரண்படும்போதும், வாதத்திற்குச் செல்லும் போதும் ஒரு கட்டத்தின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது பெயரைப் பயன்படுத்தி தன்னை தற்காத்துக் கொள்வது போன்ற ஒரு தோற்றப்பாடு காணப்படுகின்றது.
தான் தேசியத் தலைவரின் வழி நின்றவன் என்றும், யாழில் பிறந்த தமிழன் என்றும் சபையில் தன்னை அடிக்கடி அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |