இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: ஈரான்
இஸ்லாமிய நாடுகள் தங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளைக் கைவிட்டு, வல்லரசுகளின் அதிகப்படியான பேராசைகள் மற்றும் கோரிக்கைகளை எதிர்கொள்ள ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஈரான் கோரியுள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஈரானின் 'தஸ்னிம்' செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தவொரு சூழ்நிலையிலும் இஸ்லாமிய உலகிற்குள் ஒற்றுமையைக் கட்டியெழுப்பவே நாங்கள் முயல்வோம்" என்று கூறிய அராக்சி, சவூதி அரேபியா, எகிப்து, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை "இஸ்லாமிய உலகின் பெரும் குடும்பத்தின்" ஒரு பகுதி என சுட்டிக்காட்டியுள்ளார்.
சில இஸ்லாமிய நாடுகளுடன் நமக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஏன் கடுமையான முரண்பாடுகள் கூட இருக்கலாம், ஆனால், வல்லரசுகளின் பேராசைகளுக்கு எதிராக இஸ்லாமிய உலகம் உறுதியாக நிற்பதற்கு நாம் இந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அண்மைய மோதலின் போது ஈரானிய மக்கள் காட்டிய உறுதியைப் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானிய மக்கள் 40 நாட்களாகத் தளராது நின்று, தங்களின் எதிர்ப்பின் மூலம் இஸ்லாமிய உலகிற்கு "ஒரு சிறந்த பாடத்தைக்" கற்றுக்கொடுத்துள்ளதாக அராக்சி சுட்டிக்காட்டியுள்ளார்.