பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தடையை நீக்கக்கோரிய விண்ணப்பம் நிராகரிப்பு
பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) சமர்ப்பித்த விண்ணப்பத்தை அந்த நாட்டின் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேன்முறையீட்டு ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை நிராகரித்துள்ளது.
இந்த செய்தியை கொழும்பின் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளதுடன் இது குறித்து விண்ணப்பத்தை தாக்கல் செய்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதப் பட்டியல்
கொழும்பின் ஊடகத் தகவல்படி, ஆறுமுகம் மற்றும் பலர் எதிர் உள்துறைச் செயலர் ஆகியோரின் மேன்முறையீடுகளின் அடிப்படையில் ஆணையம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
அகிம்சை வழிகளில் அதன் அரசியல் மற்றும் கருத்தியல் நோக்கங்களைத் தொடர விரும்புவதால், ஐக்கிய இராச்சியத்தில், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தடைசெய்யப்படக்கூடாது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாதத்தை முன்வைத்திருந்தது.
எனினும் இலங்கையின் சுதந்திர தமிழ் அரசை நிறுவுவதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆதரவளிக்கிறது என்ற நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கிறது என்பதை ஆணையகம் கவனத்தில் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதியன்று ஐக்கிய இராச்சியத்தின் இராஜாங்க செயலர் தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்தார்.
இந்தநிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்குவதற்கு முன்னரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேன்முறையீடு
2018ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் திகதியன்றும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை அகற்றப்பட வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானிய உள்துறை அமைச்சகத்திற்கு விண்ணப்பித்திருந்தது.
எனினும் கூட்டு பயங்கரவாத பகுப்பாய்வு மையம், உள்நாட்டு மற்றும் சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்களின் பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டிற்கான பிரித்தானிய மையம் ஆகியவற்றின் மதிப்பாய்வு செயல்முறையைத் தொடர்ந்து, இராஜாங்க செயலர் 2019 மார்ச் 8 ஆம் திகதியன்று விண்ணப்பத்தை நிராகரித்து விட்டார்.
இருந்தபோதும் 2020 அக்டோபர் 21ஆம் திகதியன்று மேன்முறையீட்டு ஆணையம் மேன்முறையீட்டாளர்களின் மேன்முறையீட்டை அனுமதித்தது.
இது தொடர்பான தீர்ப்பு 2021 மே 13ஆம் திகதி வழங்கப்பட்டது. அதில், 2012 ஜூன்; 3ஆம் திகதிக்குள் தடை நீக்கம் செய்வதற்கான விண்ணப்பத்தில் கூடுதல் பிரதிநிதித்துவங்களை வழங்க வேண்டும், மேலும் அரச செயலர் தனது விண்ணப்பத்தின் மீதான தடையை நீக்குவதற்கான முடிவை எடுக்க வேண்டும் என்று ஆணையகம் குறிப்பிட்டிருந்தது.
எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்வதற்கு இராஜாங்க செயலர் புதிய முடிவை எடுத்து, அது 2021 ஆகஸ்ட் 31ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
மேன்முறையீடு நிராகரிப்பு
இந்தநிலையில் 2021 அக்டோபர் 12ஆம் திகதியன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், அந்த முடிவை எதிர்த்து மேன்முறையீடு செய்தது. அத்துடன் மற்றொரு குழுவும் தடை நீக்கம் செய்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தது.
எனினும் அந்த விண்ணப்பங்களும் இராஜாங்க செயலாளரால் நிராகரிக்கப்பட்டன. இந்தநிலையிலேயே தற்போது மேன்முறையீட்டு ஆணைக்குழு மேன்முறையீட்டை நிராகரித்ததுடன், இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர உத்தரவிட்டுள்ளது
மேன்முறையீடு செய்தவர்கள் சார்பில் பீட்டர் ஹெய்ன்ஸ் மற்றும் பொது சட்ட நலன் மையத்தால் அறிவுறுத்தல் அமைப்பின் சாந்தி சிவகுமாரன் ஆகியோர் ஆணையகத்தில் முன்னிலையாகினர். இராஜாங்க செயலர் சார்பில் பென் வட்சன் கே.சி., அண்ட்ரூ டீக்கின் மற்றும் வில் ஹேஸ் ஆகியோர் முன்னிலையாகினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |