இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மெலன் மாபுலா எனப்படும் ஊரு ஜூவா மற்றும் தாரக பெரேரா விஜேசேகர எனப்படும் கொஸ்கொட தாரக்க ஆகிய இருவரும் கொல்லப்பட்டமை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இந்த மரணங்கள் சட்டவிரோத படுகொலைகளாகவே கருதப்பட வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
தனது பாதுகாப்பில் உள்ள கைதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான மரணங்கள் சட்டவாட்சிக்கு முரணானது எனவும், இது நாட்டின் நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையிலானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது.
