மேன்முறையீடு தோல்வி! அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேறும் முன்னிலை டென்னிஸ் வீரர்!
அவுஸ்திரேலிய திறந்தநிலையில் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று, ”வெற்றியாளர்” பட்டத்தை தக்கவைக்கும் வாய்ப்பை முன்னிலை வீரர் ஜோகோவிச் இழந்துள்ளார்.
2022 ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய திறந்தநிலை டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது
இந்தத் தொடரில் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டவர்கள் மாத்திரமே பங்கேற்க முடியும் என்று புதிய விதிமுறை உள்ளது.
எனினும் நோவக் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் போட்டியில் பங்கேற்பதில் தடங்கல் ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையிலும் போட்டியில் பங்கேற்க போட்டி அமைப்பு குழுவின் மருத்துவ குழுவிடம் இருந்து மருத்துவ விதிவிலக்கு பெற்று அவர், கடந்த 5ஆம் திகதி மெல்போர்ன் சென்றார்.
இருப்பினும், அங்கு அவரது விசாவை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
அத்துடன் அவர் மெல்போர்னில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
இதனையடுத்து தனது விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மெல்போர்ன் நீதிமன்றில் வழக்கை தொடர்ந்த ஜோகோவிச் சாதகமான தீர்ப்பையும் பெற்றார்.
இந்தநிலையில் அவுஸ்திரேலிய குடியுரிமை அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை மீண்டும் ரத்து செய்தார்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜோகோவிச் மேல்முறையீடு செய்தார்.
எனினும் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜோகோவிச்சின் கோரிக்கையை இன்று நிராகரித்துள்ளது
இதன் காரணமாக, ஜோகோவிச் அவுஸ்திரேலிய திறந்தநிலை டென்னிஸ் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் நாடு கடத்தப்படும் நிலையையும் எதிர்நோக்கியுள்ளார்.
இதேவேளை நீதிமன்ற தீர்ப்பினால் வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ள ஜோகோவிச், நீதிமன்ற உத்தரவை மதிப்பதாக அறிவித்துள்ளார்.




