கோர விபத்தில் சிக்கி இளம் தந்தை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு
அநுராதபுரத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், தம்புள்ளையில் இருந்து கெக்கிராவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கண்டி நோக்கி பயணித்த சிறிய ரக லொறியை முந்திச் செல்ல முற்பட்ட போது, கண்டி நோக்கி பயணித்த பேருந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தின் போது பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் பேருந்தின் அடியில் சிக்கி சுமார் 20 மீற்றர் தூரம் முன்னோக்கி இழுத்துச்செல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்ததாகவும் அவர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் விபரம்
இதன்போது விபத்துக்குள்ளான லொறியில் சாரதியும் மற்றுமொரு நபரும் பயணித்துள்ளதாகவும், அவர்களும் விபத்தில் காயமடையவில்லை எனவும், எனினும் லொறி பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியில் ஏற்றி அப்பகுதி மக்கள் தம்புள்ளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளனர்.
தம்புள்ளை, களுந்தல்லுல பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய நபரும், கண்டி சத்திரலியடி பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், மற்றைய இளைஞருக்கு ஒரு மாதக் குழந்தை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விளக்கமறியல் உத்தரவு
இந்த விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தலாவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்த இருவரது சடலங்களும் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை நாளை தம்புள்ளை வைத்தியசாலையின் கண்காணிப்பு வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பேருந்து சாரதியை கெக்கிராவ பதில் நீதவான் கித்சிறி அம்பகஹவத்தவிடம் இன்று (12) பொலிஸார் முன்னிலைப்படுத்திய நிலையில், அவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |