25 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு என்ற ரணிலின் வாக்குறுதி: அப்பட்டமான பொய் என்கிறார் அனுர
அரசு ஊழியர்களின் சம்பளம், 25 ஆயிரம் ரூபாயினால் உயர்த்தப்படும் என்று அரசாங்கம் கூறியிருப்பது அப்பட்டமான பொய் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எனினும், தமது அரசாங்கம், அரச ஊழியர்களின் சம்பளத்தை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு உயர்த்தும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தேசிய மாநாட்டில் இன்று(30) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சம்பள உயர்வு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அண்மையில் 10ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வைக்கோரி அரச பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டபோது போதிய நிதியில்லை என்றுக்கூறி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதனை நிராகரித்திருந்தார்.
எனினும், எதிர்வரும் ஜனவரியில் இருந்து 25ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழங்கப்போவதாக அவர் அறிவித்து வருகிறார்.
அவ்வாறெனில் எவ்வாறு அதற்கான நிதியை ரணில் தேடுவார்.
இந்தநிலையில், அரச ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சம்பளம் வழங்கப்படும்.
இந்த சம்பளம் தேர்தல் நேரத்திலோ அல்லது ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் போதோ வழங்கப்படும் சம்பள உயர்வு அல்ல என்பதுடன் இது வழக்கமான அடிப்படையில் வழங்கப்படும்.” என்று அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.