கடினமாக இருந்தாலும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி நிச்சயம்: அநுர உறுதி
எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி நிலைநாட்டப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவப் பணிவாழ்வின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று(07) திங்கட்கிழமை கொழும்பு பேராயர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கௌரவிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
“நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கர்தினால் எவ்வளவு மனவேதனையுடன் இருக்கிறார் என்பதை நான் அறிவேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவரது மனதில் கலந்துள்ளது. சந்திக்கும் அனைத்து சந்தரப்பங்களிலும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் விடயங்களை விசாரிப்பார்.
பலவீனமான நிலை
அது சில சந்தர்ப்பங்களில் அமைதியான தொனியில் இருக்கும். சில சந்தர்ப்பங்களில் குழப்பத்துடன் இருக்கும். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அழுத்தம் விடுக்கும் வகையில் இருக்கும்.
ஆனால், அவருக்குத் தனிப்பட்ட எந்தத் தேவையும் இல்லை என்பதை நாம் அறிவோம். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய எண்ணமே எமக்குள்ளது.
அது தொடர்பான விசாரணைகளைக் கால ஓட்டத்தில் மூடிமறைக்க இடமளிக்காது நீதியைப் பெற்றுக்கொடுக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் நான் எடுப்பேன் என்பதை கர்தினால் முன்னிலையில் உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன். அது இலகுவான விடயமல்ல.
சில சந்தர்ப்பங்களில் அரசு, அரச அதிகாரிகளிடமே விசாரணைகளை மேற்கொள்கின்றது. தற்போது அரசே அரச அதிகாரிகளிடம் விசாரணை முன்னெடுக்கும் பலவீனமான நிலையை எதிர்நோக்கியுள்ளது. இதுவே எமது நெருக்கடி நிலைமை. எனினும் நிச்சயம் நீதி வழங்கப்பட வேண்டும். நாம் அதனைச் செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

பிள்ளையானும் இனியபாரதியும் கிழக்கில் ஏற்படுத்திய இருண்டயுகம்! உயிர்பிழைத்த ஊடகவியலாளரின் வாக்குமூலம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |