ஜனாதிபதிக்கு வாழ்த்து கூறி அவரை சாடிய நாமல்
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி அதனைத் தொடர்ந்து அவரை விமர்சனம் செய்துள்ளார்.
76 ஆண்டுகால சாபம் குறித்து பிரசாரம் செய்த இந்த அரசாங்கம் ஓராண்டு காலத்தில் எதனையும் சாதிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை ஏமாற்றுகிறார்கள்
76 ஆண்டுகால சாபம் ஒருபுறம் இருக்க ஓராண்டு கால சாபம் பற்றி நாம் பார்க்க வேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்டத்தில் மிகவும் நடைமுறை சாத்தியப்பாடுடைய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார் என நாமல் சுட்டிக்காட்டினார்.
எனினும் கடந்த வரவு செலவுத் திட்டத்தின் போது தனது சொந்த ஊரான தம்புத்தேகம ரயில் நிலையத்தை மீளமைப்பதாக ஜனாதிபதி உறுதி அளித்திருந்தார், எனினும் இதுவரையில் அந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை என நாமல் குற்றம் சுமத்தியுள்ளார்.
250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்து புதிய ரயில் பெட்டிகளை உருவாக்கவும் நவீனமயப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வரவு செலவு திட்டத்தில் கூறப்பட்டிருந்தது என தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த நடவடிக்கையும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். திண்மக்கழிவு முகாமைத்துவத்தை அனுராதபுரத்திலிருந்து முன்னெடுக்க உள்ளதாக உறுதி அளிக்கப்பட்டது.
எனினும் இதுவரையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை, நான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஊரில் நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறப்பட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சொந்த ஊரிலேயே திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால் ஏனைய இடங்களில் எவ்வாறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என கேள்வி எழுப்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அமைச்சர்கள் ஜனாதிபதியையும் ஏமாற்றுகிறார்கள் என்று நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டி உள்ளார்.
அனுராதபுரத்தில் திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்காக 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது, எனினும் அந்தத் திட்டம் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
நான் உங்களிடம் 77 ஆம் ஆண்டு சாபம் பற்றியே விளக்குகின்றேன் என நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.