நேபாளத்திற்கு நிதியுதவி வழங்க முன்வந்த அநுர: எச்சரிக்கை விடுத்த நாமல்
அநுர அரசாங்கம் நாட்டு மக்களை ஏமாற்றுவதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேபாளத்திற்கு நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார் என்றும் இலங்கையில் மக்களை ஏமாற்றியது போன்று நேபாளத்தையும் இந்த அரசாங்கம் ஏமாற்றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாயிகளுக்கு கூறிய பொய்யை போன்று நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலர் வழங்குவதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் விட்டுவிட வேண்டாம் என நாமல் ராஜபக்ச ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.
டித்வா புயல் ஏற்பட்ட காலத்தில் தகரம் ஒன்றிற்கு 10 லட்சம் ரூபாய் தருவதாகவும் வீட்டிற்கு 50 லட்சம் ரூபாய் தருவதாகவும் அரசாங்கம் உறுதிமொழி வழங்கியதாக அவர் நினைவூட்டியுள்ளார்.
இதேபோன்று நேபாளத்திற்கும் இந்த அரசாங்கம் பொய் வாக்குறுதி அளித்து விட்டதோ தெரியவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கம் தொடர்ந்தும் நாட்டு மக்களை ஏமாற்றக்கூடாது எனவும் நெல் கொள்வனவு செய்தால் அதற்கான உரிய விலையை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களை ஏமாற்றும் அநுர அரசாங்கம்
மேலும் எரிபொருள் விலைகளை குறைப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் எரிபொருள் விலையை குறைப்பதாகவும் வரிகளை குறைப்பதாகவும் கூறிய ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொண்ட போதிலும் நாளுக்கு நாள் வரி அதிகரித்துச் செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாழ்க்கைச் செலவு தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வரிகளை குறைப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சி பீடம் ஏறிய போதிலும் நாளுக்கு நாள் வரி அதிகரித்துச் செல்லும் நிலையை அவதானிக்க முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு விவசாயிகள் தொழில் முனைவோர் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.