புதிய அரசியல் யாப்பு குறித்து அநுரவிடம் தெளிவில்லை : சாடும் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்
புதிய அரசியல் யாப்பு தொடர்பாக அநுர அரசாங்கம் இன்னமும் தெளிவான சமிக்ஞையைக் காட்டவில்லை என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகக் கட்டமைப்பு
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, புதிய அரசியல் யாப்பு தொடர்பாக அநுர அரசாங்கம் இன்னமும் தெளிவான சமிக்ஞையைக் காட்டவில்லை. இதற்கான பணிகள் ஜனவரியில் ஆரம்பமாகும் என நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.
ஜனவரி மாதம் நடுப்பகுதியை கடந்து விட்ட நிலையிலும் அதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.
புதிய யாப்பு அநுர அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கையான முறைமை மாற்றத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். ஆனால் முறைமை மாற்றத்திற்கான காலம் இன்னமும் கனிந்து வரவில்லை.
பணிகள் ஆரம்பமாகுவதை தாமதப்படுத்துவதற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கும். முறைமை மாற்றத்தை கொண்டு வர வேண்டுமாயின் பொது நிர்வாகக் கட்டமைப்பையும் படைக்கட்டமைப்பையும் சீராக்க வேண்டும்.
இந்தச் சீராக்கல் இல்லாமல் முறைமை மாற்றத்தை நெருங்க முடியாது. கிளீன் சிறீலங்கா திட்டமும் பெரியளவிற்கு நகர்வதாகத் தெரியவில்லை.
ஆங்காங்கே அதற்கு எதிர்ப்புகள் வரத் தொடங்கி விட்டன. விழிப்புணர்வுப் பரப்புரையைத் தான் செய்கின்றோம் பணிகள் இன்னமும் தொடங்கவில்லையென அரசாங்கம் சமாளிப்பு செய்யப் பார்க்கின்றது.
புதிய யாப்பின் உள்ளடக்கம்
பொதுத்துறைக் கட்டமைப்புக்குள் தற்போது மேல் நிலையில் உள்ளவர்கள் பதவி நீங்கினால் தான் சீராக்கல் இலகுவாக இருக்கும். இதற்கு சேவை மூப்பு பெற்று ஓய்வு பெறும் வரை சற்று பொறுமை காக்க வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு உண்டு.
இவைத் தவிர புதிய யாப்பின் உள்ளடக்க பிரச்சினையும் அரசாங்கத்திற்கு உண்டு.
உள்ளடக்க விடயத்தில் பிரதானமாக மூன்று விடயங்கள் அடங்கியிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது.
ஜனாதிபதி முறை நீக்கம், தேர்தல் முறை மாற்றம், இனப்பிரச்சினைத் தீர்வு என்பனவே அவ் மூன்று மாகும். இந்த மூன்று விடயங்களும் தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் நலன்களுடனும் தொடர்புபட்டவை.
இன ஒடுக்குமுறை சர்வதேச மயப்படுத்தப்பட்ட நிலையில் முன்னரைப் போல தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக அரசாங்கத்தினால் செயற்பட முடியாது.
13வது திருத்தம் இந்தியத் திணிப்பு
தேசிய மக்கள் சக்திக்கு மூன்று சமூகத்தவர்களினதும் ஆதரவு கிடைத்தமையினால் முன்னரைப் போல அவர்களுக்கு எதிராக செயல்பட முடியாது.
இது விடயத்தில் தேசிய மக்கள் சக்தி தனது மரபு ரீதியான இனவாத முகத்திற்கும் புதிய நல்லிணக்க முகத்திற்குமிடையே ஊசலாடுகிறது எனக் கூறலாம்.
ஜனாதிபதி முறைமையில் இரண்டு விடயங்கள் முக்கியமானவை. ஒன்று ஜனாதிபதியிடமுள்ள அதிகாரங்கள் இரண்டாவது தமிழ், முஸ்லீம், மலையக மக்களும் ஜனாதிபதி தெரிவில் பாதிப்பு செலுத்தக் கூடியதாக இருக்கின்றமை.
இந்த இரண்டும் புதிய அரசியல் யாப்புருவாக்கத்திலும் தாக்கம் செலுத்தக்கூடியதாக இருக்கும்.
இந்தநிலையில், அநுர அரசாங்கம் குறைந்தபட்சம் 13வது திருத்தத்தை யாப்பில் சேர்க்க முயற்சிக்கும் அல்லது நல்லாட்சிக் கால “ஏக்கிய ராச்சிய" யோசனையை முன்வைக்கப் பார்க்கும்.
எந்த வகையிலும் 13வது திருத்தத்திற்கு குறைவான ஒன்றை முன்மொழிய முடியாது. தவிர 13வது திருத்தம் இந்தியத் திணிப்பு என்ற கருத்து தேசிய மக்கள் சக்தியிடமும் உண்டு.சிங்கள மக்களிடமும் உண்டு.
இதனால் 13 வது திருத்தத்தை இல்லாதொழிக்க அநுர அரசாங்கம் முனையலாம். ஆனால் 13வது திருத்தம் இந்திய நலன்களோடு தொடர்புடைய ஒன்றாக உள்ளமையினால் இந்தியா இந்த நீக்கத்தை ஏற்றுக் கொள்ளாது.
13 வது திருத்தம் இல்லாமல் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை இந்தியாவினால் பாதுகாக்க முடியாது. இந்தியாவிற்கு இலங்கை மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரேயொரு ஆவணம் இந்திய - இலங்கை ஒப்பந்தம் தான்.
எனவே புதிய அரசியல் யாப்பு சிக்கல்களை மொத்தமாக இணைத்து நோக்கும் போது புதிய அரசியல் யாப்பு அதிக தூரத்தில் உள்ளது என்றே கூறலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |