செந்தில் தொண்டமான் - வடிவேல் சுரேசுக்கு எதிராக ஆளும் தரப்பு நடவடிக்கை
பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சுக்கு சொந்தமான தோட்டங்களுக்குரிய பங்களாக்களில் பலவந்தமான முறையில் வசித்த முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றில், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன(samantha widyaratne) முன்வைத்த கருத்துக்களில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“சிலாபம் மணல் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பகுதியில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அகழ்வு செய்யப்பட்டுள்ளது.
பெரிய மோசடி
இது ஒரு பெரிய மோசடி பற்றிய அறிக்கைகளுக்கு வழிவகுத்தது. தற்போது, விசாரணைகள் நடந்து வருகின்றன, மேலும் சுமார் 400 மில்லியன் ரூபாய் மதிப்பிலான மோசடி பரிவர்த்தனை நடந்துள்ளதாக முதற்கட்ட கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த மோசடிக்கு இறுதிப் பொறுப்பான தரப்பினரை அடையாளம் காண்பது கடினம்.
இருப்பினும், இரண்டு முக்கிய அரசியல்வாதிகளை இந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் ஊழல்வாதிகள் தற்போது திணறுகிறார்கள்.
முன்னாள் அமைச்சர், ஒருவர் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம் தொடர்பில் முறையற்ற கருத்துக்களை உரத்த குரலில் பேசினார். இவரை பற்றி நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். இவர் பதுளை தமிழ் மகளிர் பாடசாலையின் அதிபரை அச்சுறுத்தி மன்னிப்பு கோர செய்து மண்டியிட வைத்தவர் இந்த சம்பவம் தொடர்பில் அந்த அதிபர் 2018.01.03 ஆம் திகதி காலப்பகுதியில் பொலிஸ் முறைப்பாடளித்துள்ளார்.
இந்த நபர் கடந்த அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார். எப்பாவெல தொழிற்சாலைக்கு சென்று அங்கிருந்த உத்தியோகஸ்த்தர்களை தாக்கினார்.
முறையற்ற வகையில் செயற்பட்டு, நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 786 மில்லியன் ரூபா அரசாங்கத்துக்கு நட்டமேற்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே தற்போது இந்த முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தான் கலக்கமடைந்து உரத்த குரலில் கூச்சலிடுகிறார்கள்.
பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி
பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சராக பதவியேற்று ஒருமாத காலத்துக்குள் எனக்கு பெயர் குறிப்பிடாத கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றது. அக்கடிதத்தில் பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சுக்கு சொந்தமான தோட்டங்களுக்குரிய பங்களாக்களை அரசியல்வாதிகள் பலவந்தமான முறையில் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் தற்றுணிவு இருந்தால் நடவடிக்கை எடுங்கள். கடந்த காலங்களில் ஜனாதிபதி, அமைச்சர் என்று பலருக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது'
பெயர் குறிப்பிடப்படாத கடிதத்தால் நான் அதனை பெரிதாக கவனத்திற் கொள்ளவில்லை. இருப்பினும் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் குறித்து ஆராயுமாறு உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கினேன்
.அதற்கமைவாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான் பதுளை மாவட்டம் எட்டபிட்டிய திக்வெல்ல ' டிஸ்லேன்ட்' பங்களாவில் கடந்த 13 ஆண்டுகளாக பலவந்தமான முறையில் இருந்துள்ளார்.
அதேபோல் கடந்த அரசாங்கத்தில் ஆளும் மற்றும் எதிர் என்று அனைத்து பக்கங்களிலும் இருந்த வடிவேல் சுரேஸ் பதுளை ஹாலி எல பகுதியில் பெருந்தோட்டத்துக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 19 ஆண்டுகளாக வாழ்ந்துள்ளார்.
உண்மையை அறியாத மக்கள்
ஆனால் இவ்விருவரும் தமது சொந்த பங்களாவில் வாழ்வதாக தான் அப்பிரதேச மக்கள் குறிப்பிட்டார்கள். அவர்களும் உண்மையை அறியவில்லை. விசாரணை குழுவின் அறிக்கை கிடைத்ததும் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினேன்.
இதற்கமைய செந்தில் தொண்டமானுக்கு இவ்விடயம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ' தற்போதைய அரசாங்கத்திடம் ஏதும் முடியாது.' என்று குறிப்பிட்டுக் கொண்டு பங்களாவில் இருந்து வெளியேறியுள்ளார்.
19 ஆண்டுகளாக வசிக்கும் பங்களாவில் தனக்கு சட்ட உரிமை உள்ளது என்று வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டு 1 வாரம் காலவகாசம் கோரியிருந்தார். அவருக்கு காலவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் தனது உரிமையை நிரூவிக்கவில்லை. பின்னர் பங்களாவில் இருந்து வெளியேறினார்’’ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |