வெளுக்கும் அநுர அரசின் சாயங்கள்! வெளிக்கிளம்பும் ஜே.வி.பி எனும் பூதம் : ஏமாற்றத்தில் மக்கள்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இரண்டாவது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த ஆணையை மிக சாதூர்யமாக பயன்படுத்தி பொதுத் தேர்தலில் வரலாறு காணாத அறுதிப் பெரும்பான்மையுடனான வெற்றியை பதிவு செய்தது அநுர தரப்பு.
குறிப்பாக நாடு முழுவதும் அநுர அலை கடுமையாக வீசிய காலம் அது. சுட்டிக்காட்டி சொல்வதென்றால் வரலாற்றில் இதுவரையான நாட்களில் எந்தவொரு பெரும்பான்மை இன தெற்கு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காத வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்களிடத்தில் அநுரவுக்கான ஆதரவு அலை பெருகிற்று.
அநுரவுக்கான ஆதரவு
அதிலும், முக்கியமாக இளையோர் மத்தியில், அநுர மீதான ஈர்ப்பு சடுதியாக அதிகரித்ததுடன், அநுரவின் நடை, உடை, பேச்சு என்று ஒவ்வொன்றையும் கொண்டாட ஆரம்பித்தனர்.
எளிமை என்றனர், தூய அரசாங்கம் என்றனர், நாட்டை மீட்கப்போகும் இரட்சகர் என்றனர். இதனாலேயே வரலாற்றில் என்றும் இல்லாத 159 என்ற அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களை மக்கள் அநுர அரசுக்கு அள்ளிக் கொடுத்தனர்.
அது இருக்கட்டும்.. மக்கள் ஏன் அநுரவை நம்பினார்கள் என்ற கேள்வி ஒன்று உள்ளதல்லவா..
கடந்த கால மகிந்த, மைத்திரி, ரணில் மற்றும் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ஆட்சிகளில் கடுமையாக விரக்தியடைந்த மக்கள் மேலும், ஒரு முறை அவர்களை ஆட்சிப் பீடம் ஏற்றுவதற்கு விரும்பவில்லை. இவர்களைத் தவிர்த்து அடுத்த தெரிவாக இருந்த சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டோரிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுக்கும் அளவிற்கு முழு நம்பிக்கை இல்லை என்பதை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் எடுத்துரைத்திருந்திருந்தன.
சஜித் களமிறங்கிய இரண்டு ஜனாதிபதி தேர்தல்களிலும் அவருக்குத் தோல்வி என்றாலும், அநுர களமிறங்கிய இரண்டு ஜனாதிபதி தேர்தல்களில் இரண்டாவது முறை கிடைத்தது பாரிய வெற்றி என்றே சொல்லவேண்டும்.
பொதுத் தேர்தல் வெற்றி
அடுத்து வந்த பொதுத் தேர்தலின் போது அநுர தரப்பினர் கொடுத்த வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. இந்த வாக்குறுதிகள் அவர்களது பொதுத் தேர்தல் வெற்றிக்கு வித்திட்ட மற்றுமொரு காரணமாகும்.
ஊழல்வாதிகளை தண்டித்தல், பொதுமக்களுக்கான நிவாரணங்கள், அரச ஊழியர்களுக்கான வேதனங்கள் உள்ளிட்ட மக்களை மகிழ்ச்சிப்படுத்தக்கூடிய அல்லது, திருப்திப்படுத்தக்கூடிய கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வாக்கு வேட்டை நடத்தியது அநுர தரப்பு.
ஆனால், வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பின்னர் நடந்தவை அனைத்தும் தலைகீழான மாற்றங்களோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு மந்தகதியில் அநுர தரப்பு பயணிக்கின்றது.
அநுர தரப்பின் அமைச்சர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் அண்மைக்கால பேச்சுக்கள், செயற்பாடுகள் என பல விடயங்கள் மக்கள் மத்தியில் தற்போது அதிருப்தியை தோற்றுவித்துள்ளதாக தெரிகிறது.
இந்த அதிருப்தியை பயன்படுத்திக் கொள்ளும் எதிர்தரப்பு அரசியல்வாதிகள் அதைக் கொண்டு தங்களது தேர்தல் பிரசாரங்களை மிக வேகமாக முன்னெடுத்து வருகின்றனர். இது அநுர தரப்புக்கு ஒரு சரிவை கொண்டு வந்து சேர்க்கக் கூடும் என்று ஆளும் தரப்பு அஞ்சுகிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
அடுத்தது, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அநுர தரப்பு காட்டி வரும் அசமந்தப் போக்கும் ஆளும் தரப்புக்கு பின்னடைவாக அமையலாம். அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில், பல வருடங்களின் பின்னர் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டாலும் கூட அதிகரிக்கப்பட்ட தொகை தொடர்பில் அரச ஊழியர்கள் மத்தியில் ஏமாற்றமே காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், தற்போது அநுர தரப்பு மற்றுமொரு தேர்தலை எதிர்கொள்ள தயாராகின்றது.
குறிப்பாக, மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி நிலையை சரிசெய்து மீண்டும் ஆதரவு அலையை தோற்றுவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதுடன், அதனுள் அநுர அரசாங்கத்தின் ஆயுட்காலத்தையும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.
அரசியல்வாதிகள் கைது
இந்த நிலையில், சமகாலத்தில் பல முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் கைது செய்யப்படுகின்றமை, விசாரணைக்கு அழைக்கப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்களை அநுர அரசு தங்களது அரசியல் சார் நகர்வுகளுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என்ற தோற்றப்பாடு எழுந்துள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் சிலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறைவாசம் சென்ற நிலையில், பொதுவெளியில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர, “எதிர்வரும் நாட்களில் சிறைக்குள் ஒரு நாடாளுமன்ற அமர்வை நடத்தலாம் போல” என்று நக்கல் தொனியில் குறிப்பிட்டிருந்தார். இது ஒரு நகைச்சுவை கருத்தாக பார்க்கப்பட்டாலும், மக்களிடத்தில் அந்த கருத்து செல்லும் போது பல ஊழல்வாதிகளை எமது ஜனாதிபதி சிறைக்கு அனுப்பிவிட்டார்.. சொன்னதை செய்து காட்டிவிட்டார் என்ற உயரிய தோற்றப்பாடு ஒன்று மக்கள் மத்தியில் ஏற்படுகின்றது.
குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு மூன்று மணிநேரம், 10 பக்கங்கங்களுக்கு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் மீது மத்திய வங்கி பிணை முறி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்திய அரசாங்கம் தற்போது ரணிலை அழைத்து விசாரணை நடத்தியமை ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் மீதான குற்றச்சாட்டு ஒன்று தொடர்பிலாகும்.
இங்கு, “முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையே விசாரணைக்கு அழைத்து அவரிடம் 3 மணிநேரங்கள் அரசாங்கம் வாக்குமூலம் பெற்றுள்ளதே.. கடந்த அரசாங்கங்களில் இப்படி ஒருபோதும் நடந்ததில்லையே.. அநுர தரப்பு சொன்ன அனைத்தையும் நிறைவேற்றுகிறார்கள் தானே” என்ற அரசாங்கத்திற்கு சார்பான ஒரு மனநிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றார்கள்.
இங்கு எதற்காக, என்ன காரணத்திற்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டார்கள் என்பதை விட யார் யார் அழைக்கப்பட்டார்கள் என்பதே மக்களுக்கு மிகப்பெரியதாக தோற்றமளிக்கின்றது. விசாரணைக்கான காரணத்தை விட இங்கு அழைக்கப்பட்டது ரணில் என்பதே மக்களிடத்தில் விரைவாக சென்று சேரும்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் கைது மற்றும் அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்கள் என்ற ஒரு மாயையைக் காட்டி அநுர தரப்பு தங்களது ஆதரவு வட்டத்தினை தக்கவைத்தும், விரிவுபடுத்தவும் முயற்சிக்கிறதா.. இதனைக் கொண்டு வாக்குவேட்டைக்கு ஆயத்தமாகிறதா என்ற ஒரு கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கான திகதியினை மாற்றி ஆணைக்குழுவுக்கு அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பார்வையிட்டுள்ளதாகவும், ஒரு விசாரணை ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தை ஜனாதிபதி பார்வையிட்டமை அதிகார துஷ்பிரயோகம் என்றும் கூட சமூக வலைத்தளங்களில் ஒரு கருத்து பரவலாக பேசப்படுகின்றது.
தலதா கண்காட்சி
இது இவ்வாறு இருக்க, நடைபெற்று முடிந்துள்ள தலதா கண்காட்சியையும் அநுர தரப்பு தங்களது வாக்குவேட்டைக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொள்ள எத்தனிக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
குறிப்பாக, கடந்த காலங்களில் யுத்தம் நிறைவுற்றமைக்காகவும், கடும் வறட்சியான நிலையில் இருந்து விடுபடுவதற்காகவும் நடத்தப்பட்ட தலதா கண்காட்சி தற்போது நடத்தப்பட்டுள்ளமையை ஆளும் கட்சி தமக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்கிறதா என்ற ஐயமும் எழுந்துள்ளது.
ரணில் மற்றும் தினேஷ் குணவர்தனவின் ஆட்சிக் காலத்தில் தலதா கண்காட்சியை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்து வந்த தேர்தல்களை கவனத்திற்கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு கண்காட்சியை நடத்துவதற்கு மறுப்பு வெளியிட்டிருந்தது.
எனினும், தற்போதும் ஒரு தேர்தலுக்கு முன்னதாக அந்த கண்காட்சி நடத்தப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இந்தக் கண்காட்சியை கடந்த பெப்ரவரி மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், எனினும் ஜனாதிபதியின் தலையீட்டின் காரணமாக ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் கூட சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. எனவே தலதா கண்காட்சியையும் அநுர தரப்பு தங்களது வாக்கு வேட்டைக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என்ற கருத்தும் நிலவுகின்றது.
தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அரசியல் செய்தாலும் கூட ஜேவிபி கட்சியின் ஒரு பிம்பமாகவே அது பார்க்கப்படுகின்றது. குறிப்பாக கடந்த காலங்களில் ஜேவிபி கிளர்ச்சிகளில் அதிகமாக பாதிக்கப்பட்ட சிங்கள பௌத்த மக்கள் அதனுடைய மாற்று வடிவமான தேசிய மக்கள் சக்தியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், அவர்களது ஆதரவினையும் பெற்று தங்களது ஆதரவு வட்டத்தை பெரிதாக்க அநுர தரப்பு எண்ணுகின்றது எனவும், அவர்களின் மனங்களில் இடம்பிடிக்க பல வருடங்களின் பின்னர் தலதா கண்காட்சியை அநுர தரப்பு நடத்தி முடித்துள்ளது என்றும் கூறப்படுகின்றது.
சுட்டிக்காட்டிச் சொல்வதென்றால், தலதா கண்காட்சியை பார்வையிட வந்து வரிசையில் காத்திருந்த மக்களைச் சந்திக்க கால நேரம் பாராமல் ஜனாதிபதி அநுர சென்றுள்ளதுடன், கள நிலவரங்களை ஆராய்ந்து மக்களிடம் சுமூகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதன்போது, பல முதியோர்கள் தங்களுக்கு இந்த அரும்பெரும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தமைக்காக கண்ணீர்மல்க நன்றிகளை செலுத்தியிருந்தனர். இந்த நன்றிகள் அனைத்தையும் தேர்தல் முடிவுகளாக பார்க்க அவாவுடன் காத்திருக்கின்றது அரசாங்கம்...
வேட்பாளர்கள்
எவ்வாறாயினும், தற்போது நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் களமிறங்கியிருக்கும் அநுர தரப்பு வேட்பாளர்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சர்ச்சைக்குரிய பல கருத்துக்கள், காணொளிகள் என்று வேட்பாளர்கள் தொடர்பான முகம்சுழிக்கும் வகையிலான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது.
வாக்கு வங்கியை அதிகரிக்க அயராது பாடுபடும் அநுர அரசாங்கம் வேட்பாளர் தெரிவில் கோட்டைவிட்டுவிட்டதோ என்ற ஒரு ஐயப்பாடும் உள்ளது.
உள்ளூராட்சி மன்றங்கள் என்பது நேரடியாகவே மக்களைச் சார்ந்திருப்பதால் அதில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களே அரசாங்கத்தின் அடுத்த வெற்றிக்கு அடிப்படையானவர்கள்.. எனவே ஊர் நமதே என்ற பிரசாரத்திற்கு முன்னர் அடிப்படை மாற வேண்டும்..
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Benat அவரால் எழுதப்பட்டு, 29 April, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
