நிலக்கரி மோசடிக்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும்
நிலக்கரி இறக்குமதி நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற பாரிய மோசடிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஒட்டு மொத்த அமைச்சரவையும் பொறுப்பேற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் மின் உற்பத்தியில் முக்கிய எரிசக்தி மூலமான நிலக்கரி இறக்குமதி செயல்பாட்டில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) என்ற ரீதியில் நாம் பலமுறை நாட்டுக்கு சுட்டிக்காட்டியுள்ளோம்.

தரமற்ற நிலக்கரி கொள்வனவு டெண்டர் ஊடாக இடம்பெற்றுள்ள இந்த முறைகேடு குறித்து நாம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி ஊடாக இடம்பெற்ற ஊழல் குறித்து நாம் முன்வைத்த உண்மைகளை ஏளனமாக நிராகரித்த தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மிகவும் மமதையுடன் செயற்பட்டு தனது ஊழலை மக்கள் சமூகத்திடமிருந்து மறைக்க கடும் முயற்சியில் ஈடுபட்டதை எம்மால் காண முடிந்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த வெளிப்படுத்தல்களுக்கு மேலதிகமாக, பின்வரும் விடயங்கள் ஊடாக இந்த ஊழலின் உண்மை நிலை நாட்டுக்குத் தெரியவந்தது:
• நிலக்கரி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பதவிலகும் போது வெளியிட்ட அறிக்கை.
• நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள்.
• பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கையின் மூலம் தெரியவந்த நிதி இழப்பு.
• டெண்டர் முறைகேடுகள் குறித்து கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை.
நிலக்கரி அவசர கொள்வனவு தொடர்பான சர்ச்சைக்குரிய குரல் பதிவு உண்மையானது என்பதை நிலக்கரி நிறுவனத்தின் தலைவரே தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் அவர்களுக்கும் நிலக்கரி கொடுக்கல் வாங்கல்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணை செய்ய நாம் ஏற்கனவே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளோம்.
பிரபல வர்த்தகர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கும் இடையிலான திரைமறைவு கொடுக்கல் வாங்கல்களின் மற்றொரு அங்கமே இந்த நிலக்கரி ஊழல் என்பது தற்போது அம்பலமாகி வருகிறது.
குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போது மௌனம் காத்த அரசாங்கம், இன்று அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளரை பதவி விலகச் செய்வதன் மூலம் பில்லியன் கணக்கான நஷ்டத்தை மக்கள் மனதிலிருந்து மறைக்க ஒரு "நாடகத்தை" அரங்கேற்றத் தொடங்கியுள்ளது.
இந்த ஊழல் கொடுக்கல் வாங்கலுக்கு பொறுப்பான அமைச்சர் மாத்திரமன்றி, அமைச்சரவையின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியும் முழு அமைச்சரவையும் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
எனினும், கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடியைப் பாதுகாப்பதன் மூலம் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளும் மக்கள் வைத்த நம்பிக்கையை உடைத்தெறிந்ததை முழு நாடும் கண்டது.
இந்த மோசடியான நிலக்கரி கொள்வனவு மூலம் நாட்டுக்கும் மக்களின் வரிப்பணத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட நட்டத்திற்காக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதுடன், அரசாங்கத்தின் இத்தகைய ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என வலியுறுத்திக் கூறுகிறோம் என ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam