பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக ரத்து செய்ய முடியாது! அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவல்
பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்று முழுதாக ரத்து செய்ய முடியாது என அரசாங்கம் கூறியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சட்டத்தை ரத்து செய்தால் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 310 பேர் விடுதலைலயாகும் சாத்தியம் காணப்படுவதாக அரசாங்க உயர்மட்டத் தகவல்களை சுட்டிக்காட்டி குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாகவே தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்து விசாரணை செய்ய முடிந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை ரத்து செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மனித உரிமை பேரவை ஆணையாளர் உள்ளிட்ட தரப்புக்கள் கோரிக்கை விடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரும் சுவிட்சர்லாந்தில் மிகக் கடுமையான பயங்கரவாத தடைச் சட்டம் காணப்படுகின்றது என குறித்த தெற்கு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறெனினும், பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்று முழுதாக ரத்து செய்யும் யோசனையை நிராகரிப்பதாக அரசாங்கம் அதிகாரபூர்வமாக இதுவரையில் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.