யாழில் சுதந்திர தின எதிர்ப்பு கறுப்பு பேரணி ஆரம்பம் (video)
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய சுதந்திர தின எதிர்ப்பு கறுப்பு பேரணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு பேரணி ஆரம்பமாகி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக சென்ற நிலையில் பொலிஸார் பேரணியை நடத்துவதற்கு அனுமதி இல்லை என தெரிவித்து பேரணியை தடுக்க முற்பட்ட போது போராட்டக்காரர்கள் பொலிஸாரின் தடைகளை உடைத்து இராமநாதன் வீதி ஊடாக பயணித்தனர்.
பின்னர் இராமநாதன் வீதியின் ஊடாக சென்ற பேரணியை கலட்டி சந்தியில் மீண்டும் பொலிஸார் இடைமறித்த போது தடைகளை மீறி போராட்டக்காரர்கள் தொடர்ந்து பயணித்து காங்கேசந்துறை வீதியை சென்றடைந்தனர்.
தொடர்ந்து காங்கேசந்துறை வீதியால் பயணித்த பேரணி உலக தமிழாராய்சி மாநாட்டு படுகொலை நினைவுத் தூபிக்கு சென்று அங்கு அஞ்சலி செலுத்திய பின்னர் வைத்தியசாலை வீதிக்கு சென்றது.
பின்னர் வைத்தியசாலை வீதியில் இருந்து ஆரம்பமான பேரணி ஏ9 வீதிக்கு சென்று செம்மணி சந்தியை அடைந்தது. செம்மணி சந்தியில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு மட்டக்களப்பு நோக்கிய பேரணி தொடர்ந்து பயணித்தது.
முதலாம் இணைப்பு
வடக்கு, கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுடன் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய சுதந்திர தின எதிர்ப்பு கறுப்பு பேரணியும் ஆரம்பமாகியுள்ளது.
இந்த பேரணி இன்று (04.02.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழர் தயகத்தின் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து, தடைகளை உடைப்போம், அபகரிக்கப்பட்டுள்ள எமது நிலங்களை திருப்பிக்கொடு, தமிழர் தேசம் எமது அடையாளம் ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஏற்பாடு செய்த இந்த எதிர்ப்பு பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பேரெழுச்சியாக கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேரணி காரணமாக யாழ்ப்பாண நகர் பகுதியில் அதிகமான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி: கஜிந்தன்






இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
