மற்றுமொரு நோயாளி திடீர் உயிரிழப்பு: மருத்துவர்கள் வெளியிட்டுள்ள காரணம்
கிருமித் தொற்று காரணமாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த மரண சம்பவம் நேற்றைய தினம் (13.07.2023) இடம்பெற்றுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய ஔடதங்கள் ஆணைக்குழுவின் முகாமைத்துவ உதவியாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்குப் பொருத்தப்பட்டிருந்த கெனியூலாவில் இருந்து கிருமித் தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காய்ச்சலினால் காலி பிரதேசத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்குச் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளார்.
எனினும் சில நாட்களின் பின் சிகிச்சையின்போது கெனியூலா பொருத்தப்பட்டிருந்த கையில் கடுமையான வீக்கம் ஏற்பட்டதையடுத்து, அவர் மீண்டும் பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது கெனியூலாவில் தொற்று ஏற்பட்டு இருதயம் வரை பரவி கிருமிகள் இரத்தத்தில் கலந்து விட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
பின்னர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இருதய நோயாளர் என்பதால் வேறு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க மருத்துவர்கள் தீர்மானித்திருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |