வெனிசுலாவை மீண்டும் உலுக்கிய நிலநடுக்கம் - உயிரிழப்பு 920 ஆக உயர்வு
வெனிசுலாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்று (27) மற்றொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், வடக்குக்கு கடற்கரையோரமாக ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த புதன்கிழமை, வெனிசுலா ரிக்டர் அளவுகோலில் 7.5 ரிக்டர் அளவில் ஒரு கடுமையான நிலநடுக்கத்தை சந்தித்துள்ள நிலையில், அந்த நிலநடுக்கத்தால் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு
இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 920 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 243 பேர் நிலநடுக்கத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 3,360க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் தலைநகர் கராகஸ் மற்றும் வடக்குப் பகுதிகளில் பல கட்டிடங்களைச் சேதப்படுத்தியதாகவும், காயமடைந்தவர்கள் தற்காலிக மருத்துவ வசதிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்திற்குப் பின்னர் மேலும் ஒரு குழுவினர் காணாமல் போயுள்ளனர், அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.
1000-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் பாதிப்பு
இதற்கிடையில், நிலநடுக்க நிவாரணம் மற்றும் தேடுதல் பணிகளுக்காக பல சர்வதேச மீட்புப் பணியாளர்கள் வெனிசுலாவிற்கு வந்துள்ளனர்.
மேலும், முதல் நிலநடுக்கத்திற்குப் பிறகு 214 பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகருக்கு வடக்கே அமைந்துள்ள லா குவைரா பகுதியில் இந்த நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், மீட்புப் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையைத் தொடர்ந்து, நாட்டில் 1,000-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் வெனிசுலா நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.