ஓமானில் இருந்து மேலும் 14 பெண்கள் நாடு திரும்பினர்
ஓமான் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்களாக வேலைக்கு சென்று இலங்கை திரும்ப முடியாமல் இருந்த 14 பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இவர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
நாடு திரும்பிய பெண்களில் 8 பேர் நாடு கடத்தப்பட்டவர்கள்
இந்த பெண்களின் ஆறு பேர் ஓமானில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி நிலையில், மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் சுரக்ஸா பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
மேலும் 8 பெண்கள் தாம் பணியாற்றிய வீடுகளில் சிறிய தவறுகளை செய்த குற்றத்திற்காக ஓமான் தொழில் நீதிமன்றத்தினால், நாடு கடத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நாடு திரும்ப பெண்களில் ஒரு கர்ப்பிணி பெண்ணும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பெண்கள் மஸ்கட் நகரில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் விமான மூலம் இன்று அதிகாலை 4.50 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
பெண்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்த வேலை வாய்ப்பு பணியகம்
விமான நிலையத்தை வந்தடைந்த பெண்களை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் பொறுப்பேற்ற பின்னர், அவர்களை தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓமான் நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக அனுப்பி வைக்கப்படும் இலங்கை பெண்கள், அங்கு பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்படுவதாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
மேலும் வீட்டுப் பணிப்பெண்களாக சென்ற பல பெண்கள் அந்நாட்டில் பலவேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் கூறப்பட்டது.
இவ்வாறான பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.