ஜனாதிபதி செயலாளர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
2022 ஜூலை 9 முதல் 14 வரையான காலபகுதியில் இடம்பெற்ற, ஆர்ப்பாட்டங்களின் போது காணாமல்போன, இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ சின்னங்களின் மாதிரிகளை மீளக் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தியோகபூர்வ சின்னங்களின் மாதிரிகளை, 2023 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் மீளக் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தும்
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்த போது, இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிகளுடன் தொடர்புடைய பல மதிப்புமிக்க தொல்பொருட்கள் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
அரச சொத்துக்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்திருப்பது தண்டனைக்குரிய
குற்றமாகும் என்பதால், குறிப்பிட்ட காலத்திற்கு அப்பால் இந்த உத்தியோகபூர்வ
அடையாளங்களை வைத்திருப்பது சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தும் என
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க அல்லது 0112354354 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்-சிவா மயூரி

