பிரித்தானியாவில் நடைபெற்ற அன்னை பூபதியின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல்
1988 ஆம் ஆண்டு தமிழீழத்தை ஆக்கிரமித்திருந்த இந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு தனது உயிரைத் தியாகம் செய்த அன்னை பூபதியின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று லண்டனில் நடைபெற்றுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வு லண்டன் கரோ எனும் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
1988 ஆம் ஆண்டு தமிழீழத்தை ஆக்கிரமித்திருந்த இந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் முன்றலில் சாகும்வரையிலான உணவு தவிர்ப்பு அகிம்சைப் போராட்டத்தை அன்னை பூபதி மேற்கொண்டு தனது உயிரைத் தியாகம் செய்திருந்தார்.
தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியத்தின் கலை பண்பாட்டுக் கழகப்பொறுப்பாளர் சதாவின் ஒருங்கிணைப்பில், தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் த.நிருபனின் தலைமையில் மிகவும் உணர்வுப்பூர்வமாக நினைவுகூரப்பட்டது.
தமிழீழத் தேசியக்கொடி
இதன்போது, தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியத்தின் பொறுப்பாளர் ச.அறிவாளன், தமிழீழத் தேசிய கீதம் ஒலிக்கும் தருணத்தில் தமிழீழத் தேசியக்
கொடியினை ஏற்றிவைத்தார்.
அன்னைபூபதி அம்மாவின் நினைவுடன் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் கைகளில் சுடரேந்தி மலர் வணக்கம் செலுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து தியாகச்சுடர் அன்னைபூபதியின் நினைவுப் பகிர்வுகள், கவிதை, பாடல் ஆகியவை இடம்பெற்றது.
ஜேர்மனியில் இருந்து தமிழீழ அரசியல்துறை அனைத்து நாடுகளின் துணைப் பொறுப்பாளர் இசைவாணன், பிரான்சில் இருந்து தமிழீழ அரசியல்துறை பிரான்சின் பொறுப்பாளர் நடாரவி ஆகியோர் மெய்நிகர் இணையவழி ஊடாக தியாகச்சுடர் அன்னை பூபதியம்மாவின் நினைவுகள் சுமந்து தமது நினைவுப் பகிர்வுகளை வழங்கியுள்ளனர்.
கொடி கையேற்பு
அத்துடன், சுவிஸிலிருந்து தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சோழன் மற்றும் நாவகன் நயனி ஆகியோர் அன்னை பூபதி நினைவு சுமந்த பாடலொன்றை வழங்கியுள்ளனர்.
அன்னை பூபதியம்மாவின் நினைவுப்பகிர்வுகளை தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியத்தின் பொறுப்பாளர் அறிவாளன், தமிழீழ அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் எம்.ஜி.ரகு, தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் த.நிருபன், தமிழீழ அரசியல்துறை வருவாய்ப்பகுதிப் பொறுப்பாளர் ஈசன், தமிழீழ அரசியல்துறையின் மேலவை உறுப்பினர் சுபன், மற்றும் நவமணி, சந்திரிக்கா, திவாகர் ஆகியோர்கள் வழங்கியிருந்தனர்.
அத்துடன், அன்னை பூபதியம்மாவின் நினைவு சுமந்த கவிதை ஒன்றினை தமிழீழ அரசியல்துறையின் துணை ஊடகப் பொறுப்பாளர் ம.கண்ணா வழங்கினார். அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரின் உறுதியேற்புடன், கொடி கையேற்பு இடம்பெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வைத் தொடர்ந்து தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியத்தினால் தாயகத்தில் அடுத்த கட்டமாக மேற்கொள்ளவிருக்கும் செயற்பாடுகள் சார்ந்து கலந்து கொண்ட அனைவரிடமும் இருந்தும் கருத்துகள், ஆலோசனைகள் உள்வாங்கப்பட்டு இன்றைய நிகழ்வுகள் யாவும் நிறைவுசெய்யப்பட்டது.
அன்னை
பூபதியம்மாவின் நினைவேந்தல் நிகழ்வை மிகவும் உணர்வுப்பூர்வமாக
முன்னெடுப்பதற்காகப் பாடுபட்ட அத்தனை உறவுகளுக்கும், இந்நினைவேந்தல்
நிகழ்வில் கலந்துகொண்ட அத்தனை உறவுகளுக்கும் தமிழீழ அரசியல்துறை ஐக்கிய
இராச்சியம் நிர்வாக உறவுகள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.