மனநோயாளி உயிரிழப்பு விவகாரம்: மற்றுமொரு வைத்தியசாலை ஊழியர் கைது
கொழும்பு அங்கொட வைத்தியசாலையில் உள்ள தேசிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்றாவது சந்தேகநபரான மற்றுமொரு வைத்தியசாலை உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்றையதினம் முல்லேரியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, இரண்டு வைத்தியசாலை உதவியாளர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.
bipolar disorder எனும் நோயால் பாதிக்கப்பட்ட 48 வயதான நோயாளி (20.07.2023) அன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தாக்குதலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவசர விசாரணை நடத்த தீர்மானம்
பாதிக்கப்பட்ட நோயாளியை கட்டுப்படுத்த முற்பட்ட போது வைத்தியசாலை உதவியாளர்களினால் நோயாளி தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நோயாளியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று வைத்தியசாலை உதவியாளர்கள் இன்று(29.07.2023) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட மூன்று வைத்தியசாலை உதவியாளர்களையும் சேவையில் இருந்து இடைநிறுத்துவதற்கு வைத்தியசாலை தீர்மானித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அவசர விசாரணை நடத்தப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |