அங்கொட வைத்தியசாலையில் மன நோயாளி அடித்துக்கொலை
கொழும்பு - அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் வட்டரெக பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 47 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீண்டகாலமாக மன நோய்க்கு ஆளான குறித்த நோயாளி, தீவிரமடைந்த நோய் நிலைமை காரணமாக கடந்த 20ஆம் திகதி அங்கொட மனநல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
பிரேத பரிசோதனை
எனினும், கடந்த 25 ஆம் திகதி அதிகாலை வேளையில் குளியலறையில், வழுக்கி விழுந்த சந்தர்ப்பத்தில், தலையில் அடிப்பட்டதால் அவர் மரணித்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த நோயாளியின் சடலம் முத்திரையிடப்பட்ட நிலையில், உறவினர்களிடம் வழங்கப்பட்டதன் காரணமாக உறவினர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் முல்லேரியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதன்படி அந்த வைத்தியசாலையின் விசேட சட்டவைத்திய அதிகாரி சன்ன பெரேராவினால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
ஆயுதங்களால் தாக்கப்பட்டமையால் ஏற்பட்ட பல தாக்க நிலைமைகள் காரணமாக குறித்த நபர் மரணித்தார் என்று பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பொலிஸாரால் விசாரணை
இதற்கமைய வைத்தியசாலை பணியாளர்களின் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையிலேயே அவர் உயிரிழந்தார் என்று குறித்த நோயாளியின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில், தேசிய மனநல வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தம்மிக்கா விஜேசிங்கவைத் தொடர்பு கொண்டு ஊடகங்கள் வினவியபோது, "சுகாதார அமைச்சின் அனுமதியின்றி எந்தக் கருத்துக்களையும் ஊடகங்களுக்கு வெளியிட முடியாது" - என்று பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் முல்லேரியா பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |