ஆனந்த விஜேபாலவின் எம்.பி பதவிக்கு எதிராக நடவடிக்கை
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் (Ananda Wijepala) நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேராவினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆனந்த விஜேபால, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பதவி வகிக்க தகுதியற்றவர்
நவம்பர் 18 ஆம் திகதி ஜனாதிபதியால் ஆனந்த விஜேபால பொது பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதாக மனுதாரர் சம்பந்தப்பட்ட மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட சண்டே டைம்ஸ் செய்தித்தாள், ஆனந்த விஜேபால ஜனாதிபதியின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பின்னர் கோரிக்கை விடுத்ததாகவும், அமைச்சர் ஆனந்த விஜேபால ஜனாதிபதியின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியதாகவும் மனுதாரர் கூறினார்.
ஜனாதிபதியின் தலைமைப் பணியாளர் பதவி என்பது ஒரு அரச பதவி என்றும், அதன்படி, அமைச்சர் ஆனந்த விஜேபால அத்தகைய பதவியை வகிக்கும் அதே வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இடைக்காலத் தடை உத்தரவு
அரசியலமைப்பின்படி அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் பதவி வகிக்க தகுதியற்றவர் என்று தீர்ப்பளிக்கவும், அவரது பதவியை செல்லாததாக்கும் முடிவை எடுக்கவும் மனுதாரர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
மேலும், இந்த மனு விசாரிக்கப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரை ஆனந்த விஜேபால நாடாளுமன்ற உறுப்பினராக அமரவும், நாடாளுமன்றத்தில் வாக்களிக்கவும் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும், ஆனந்த விஜேபால பொது பாதுகாப்பு அமைச்சராகச் செயல்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |