கிளிநொச்சி விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட பணம் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த போகங்களில் விவசாய அமைப்புக்களால் விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட பெருந்தொகையான நிதி முறைகேடாக கையாளப்பட்டுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவு மற்றும் பொலிஸ் தலைமையகம் ஆகியவற்றில் விவசாயிகள் சார்பாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள புலிங்கதேவன் முறிப்பு கமக்கார அமைப்பு, கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் கீழுள்ள மகிழங்காடு கமக்கார அமைப்பு இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனம் ஆகியவற்றால் ஊழல் முறைகேடுகள் மேற்கொள்ளப்பட்டதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்ட விசாரணைகள்
கடந்த 2023ஆம் ஆண்டு முதல் மாவட்ட செயலகம் வடக்கு மாகாண சபை ஆகியவற்றுக்கு முறைபாடுகளை செய்தும் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படாத நிலை காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த அமைப்புக்களால் விவசாயிகளிடமிருந்து காலப்போகம் சிறு போகத்தில் விவசாயிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பல கோடி ரூபா நிதியானது முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பிலும் தனிநபர்கள் தீர்மானங்களின்றி நிதிகளை கையாண்டமை என்ற அடிப்படையில் நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் கொழும்பு பொலிஸ் தலைமையகம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரம் கடந்த வாரம் குறித்த அமைப்புகளினுடைய நடவடிக்கை தொடர்பில் தேசிய கணக்காய்வு திணைக்கள அதிகாரிகள் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.