லொஹானை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை
லொஹான் ரத்வத்தேவை அவரது நடவடிக்கைகளுக்காக பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசியா பசுபிக்கிற்கான இயக்குநர் யாமினி மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கிமுனையில் கொலை செய்யப் போவதாக மிரட்டிய சம்பவம் குறித்து வெளியாகியுள்ள தகவல்களை சுட்டிக்காட்டி இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் யாமினி மிஸ்ரா மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் கைதிகள் நடத்தப்படுவது குறித்த எங்களது கரிசனைகள் குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அதிகாரிகள் சித்திரவதை செய்வது மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்துவது குறித்த எங்கள் கரிசனைகள் உண்மையானவை என்பதை இந்த சம்பவம் குறித்த தகவல்கள் புலப்படுத்தியுள்ளன.
அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் குற்றவியல் நடவடிக்கைளில் ஈடுபட்டால் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவது காணப்படுவதை இது வெளிப்படுத்தியுள்ளது.
உடனடி பக்கச்சார்பற்ற பயனுள்ள விசாரணை அவசியம். அமைச்சரை அவரது நடவடிக்கைகளிற்காக பொறுப்புக் கூற செய்ய வேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வில், 16 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஜனாதிபதியால் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டமை குறித்து அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் தம்பட்டம் அடித்தார்.
இவர்கள் ஏற்கனவே விடுதலை செய்யப்படவிருந்தவர்கள். லொஹான் ரத்வத்தேயின் இந்த நடவடிக்கை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமையை சரி செய்வதற்கு அரசாங்கம் நல்லிணக்கம் என்ற பெயரில் முன்னெடுக்கும் சிறிய நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல் குறித்த எதிர்கால பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளுக்காக ஆதாரங்களை சேகரித்து பாதுகாப்பதற்கான பொறிமுறையை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் நிராகரித்துள்ளார்.
இந்த விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கு உள்நாட்டு செயற்பாடுகளே அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
லொஹான் ரத்வத்தேவை அவரது நடவடிக்கைகளிற்காக பொறுப்புக்கூறச் செய்தால் மாத்திரமே உள்நாட்டு செயற்பாடுகள் குறித்த வெளிவிவகார அமைச்சரின் இந்த சொற்கள் தீவிரமானவையாக கருதப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
