இலங்கையில் எந்தவொரு அரசாங்கத்தையும் கவிழ்க்கப்போவதில்லை : உறுதியளித்த அமெரிக்கா
இலங்கையில் ஒரு செயல்பாட்டு உண்மை மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பது முக்கியமானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதனை எதிர்வரும் தேர்தல்களின் மூலம் தெரிவு செய்யப்படும் தலைவர்கள் நனவாக்குவார்கள் என எதிர்பார்ப்பதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சிங்கள தொலைக்காட்சி ஒன்றின் நடப்பு விவகார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
தேசத்தின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிகாரி, தாங்கள் எந்த அரசாங்கத்தையும் கவிழ்க்கப் போவதில்லை என்று உறுதியளித்துள்ளார்.
அமெரிக்கா வழங்கக்கூடிய மிகப்பெரிய ஆதரவு
இலங்கையின் தற்போதைய கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் முன்னேற்றம் குறித்து அவர் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா, இலங்கையின் அபிவிருத்தியில் பங்காளியாக இருக்கத் தயாராக இருப்பதாகவும், நிதி ஆலோசனைகள் மற்றும் கடன்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்
தற்போது ஆலோசனை மற்றும் கடன் வழங்குவதே இலங்கைக்கு அமெரிக்கா வழங்கக்கூடிய மிகப்பெரிய ஆதரவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கைக்குள் நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை அமெரிக்கா விரும்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |